நிஜமாகவே நடந்த 'மெர்சல்' மருத்துவமனை காட்சி: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Friday,October 20 2017]
நேற்று வெளியான தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் ஒரு காட்சியில் ஆட்டோ டிரைவரான காளிவெங்கட்டின் மகள் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார். அந்த மருத்துவமனை காளிவெங்கட் இடம் பணத்தை முடிந்த அளவுக்கு கறந்து பின்னர் மகளின் இறந்த உடலை ஒப்படைக்கவும் பணம் கேட்பார்கள்
'மெர்சல்' படம் வெளியாகி ஒரே நாள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் இதேபோன்ற ஒரு காட்சி நிஜத்திலும் நடந்துள்ளது. சேலம் பகுதியில் உள்ள ஒரு மாணவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையின் பலனின்றி இறந்த நிலையில் உடலை ஒப்படைக்க அந்த மருத்துவமனை கூடுதல் பணம் கேட்டுள்ளதாக தெரிகிறது.
மாணவரின் சிகிச்சைக்காக அவரது பெற்றோர்கள் ஏற்கனவே ரூ.62000 கட்டியுள்ள நிலையில் உடலை ஒப்படைக்க வேண்டுமானால் இன்னும் ரூ.80000 கட்ட வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இதுகுறித்து மறைந்த மாணவரின் தாயார் கூறியபோது, 'டெங்குவால் பாதிக்கப்பட்ட எனது மகனை ரூ.15 லட்சம் இருந்தால் காப்பாற்றிவிடலாம் என்று கூறினார்கள். பிச்சை எடுத்தாவது பணத்தை கட்டிவிடுகிறோம் எங்கள் மகனை காப்பாற்றுங்கள் என்று நாங்கள் கூறினோம். மூன்று நாளாக எங்கள் மகனை பார்க்க கூட அனுமதிக்கவில்லை. அவன் எப்போது இறந்தான் என்றே எங்களுக்கு தெரியவில்லை' என்று கண்ணீருடன் கூறினார்
இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகத்திடம் காவல்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இறந்த மாணவரின் உடலை மருத்துவமனை நிர்வாகம் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளது.