வருஷத்தில் 300 நாட்களை தூக்கத்திலேயே கழிக்கும் விசித்திர மனிதன்!
- IndiaGlitz, [Wednesday,July 14 2021]
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கும்பர்கர்ணனுக்கு ஈடாக ஒரு வருஷத்தில் 300 நாட்களை தூக்கத்திலேயே கழித்து வருகிறார். அதோடு ஒருமுறை தூங்க ஆரம்பித்தால் கிட்டத்தட்ட 20-25 நாட்கள் எழவே மாட்டாராம். இப்படியொரு விசித்திர மனிதரைப் பார்க்கும் அந்த ஊர் மக்கள் அவரை கும்பகர்ணன் என்றே அழைக்கின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அடுத்த நாகூர் எனும் பகுதியில் வசித்து வரும் 42 வயதான புர்காரம் எனும் நபர் ஆரம்பத்தில் 5-7 நாட்கள் வரை தூங்கிக் கொண்டே இருப்பாராம். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் என்னவென்றே தெரியாமல் குழம்பி போய் இருக்கின்றனர். இப்படியே நாட்கள் செல்ல செல்ல கிட்டத்தட்ட 20-25 நாட்கள் வரை புர்காரம் தொடர்ந்து தூங்க ஆரம்பித்து இருக்கிறார். இதனால் பதறிப்போன மருத்துவர்கள் அவருக்கு பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு Axis Hypersomnia எனும் நோய் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
நீண்ட காலம் தூங்கிக்கொண்டே இருக்கும் இந்த நோயை குணப்படுத்த முடியாது என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட இந்த விசித்திர வியாதியால் புர்காரம் இன்றுவரை தூங்கிக்கொண்டே இருக்கிறார். அதோடு பலசரக்கு கடை வைத்திருக்கும் இவர் மாதத்தில் 5 நாட்களுக்கு மட்டுமே கடையை திறந்து வைத்திருப்பாராம்.
மேலும் புர்காரம் தூங்க ஆரம்பிக்கு முன்பு அவருக்கு கடுமையான தலைவலி ஏற்படுமாம். ஒருமுறை தூங்க ஆரம்பித்து விட்டால் அவரை எழுப்புவது கடினம் என்றே உறவினர்கள் கூறுகின்றனர். இதனால் புர்காரம் தூங்கிக் கொண்டு இருக்கும்போதே அவரது மனைவி அவருக்கு சாப்பாட்டை ஊட்டி விடுகிறார். விசித்திர நோயால் அவதிப்பட்டு வரும் புர்காரமை நினைத்து பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.