ஆண்டாள் குறித்த வழக்கை சந்திக்க தயார்… கவிஞர் வைரமுத்து எடுத்த அதிரடி முடிவு!
- IndiaGlitz, [Tuesday,June 29 2021]
தமிழ் நாளிதழ் ஒன்றில் ஆண்டாள் குறித்த கட்டுரை ஒன்றை கடந்த 2017 ஜனவரி 7 ஆம் தேதி கவிஞர் வைரமுத்து வெளியிட்டு இருந்தார். இந்தக் கட்டுரை மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அமைந்து இருப்பதாக சிலர் வாதிட்டனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் சர்ச்சை வெடித்தது. அதோடு கவிஞர் வைரமுத்து மீது முருகானந்தம் என்பவர் சென்னை கொளத்தூர் போலீஸில் வழக்குத் தொடுத்து இருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையை ரத்து செய்யுமாறு கவிஞர் வைரமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை கடந்த 2018 ஆம் ஆண்டு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் ஆண்டாள் குறித்த கருத்து தன்னுடைய கருத்து அல்ல. அமெரிக்க எழுத்தாளர் கூறிய கருத்தை நான் சுட்டிக் காட்டியிருந்தேன். இந்தக் கட்டுரையில் தவறான கருத்துகள் எதையும் குறிப்பிடவில்லை. மேலும் இதில் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக எந்த கருத்தும் இடம்பெறவில்லை என விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த மனுவைத் தொடர்ந்து கொளத்தூர் போலீஸில் அளிக்கப்பட்ட வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. தற்போது வைரமுத்து மீதான வழக்கை ரத்து செய்யுமாறு கோரிய வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வைரமுத்து சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரத்துசெய்யுமாறு கோரிய வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம். ஆண்டாள் குறித்த சர்ச்சை வழக்கை எதிர்ககொள்ள தயாராக இருக்கிறோம் என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனால் ரத்து செய்யுமாறு கோரிய வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள நீதிபதி தண்டபாணி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வைணவ அடியார் ஆண்டாள் பற்றி தவறான கருத்துகளை கவிஞர் வைரமுத்து தெரிவித்து விட்டார். இதனால் மதப் பற்றாளர்களின் உணர்வுகளை அவர் புண்படுத்தி விட்டார் என்று ஒருசில தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. அந்த வழக்கின் மீதான விசாரணை நேரடியாக எதிர்கொள்ள தயார் என்று தற்போது வைரமுத்து சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.