வீடுதேடி வரும் வங்கி சேவை: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு
- IndiaGlitz, [Friday,November 10 2017]
வங்கிகளில் பணம் எடுத்தல், பணம் செலுத்துதல் காசோலைகள் மற்றும் டிடி ஆகியவற்றுக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையில் இவ்வித சேவைகளுக்காக வங்கி அதிகாரிகள் இனி வீடுதேடி வருவார்கள் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால் இந்த சலுகை 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், மற்றும் பார்வை குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
70 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு வீடு தேடி சென்று வங்கி சேவை அளிக்கும் திட்டத்தை வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் செயல்படுத்த அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சரியான வங்கி சேவைகள் அளிக்கப்படாமல் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக கிடைத்த புகார்களை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் மாதந்தோரும் இலவசமாக 25 காசோலைகள் வழங்க வேண்டும் என்றும், அந்த காசோலைகள் மூலம் பணம் எடுக்கும் போது அவர்கள் நேரில் வரவேண்டும் என வங்கிகள் கட்டாயப்படுத்தக்கூடாது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பால் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.