வங்கி சேவை பிடிக்கவில்லையா? கணக்கு எண் மாறாமல் வங்கியை மாற்றும் புதிய வசதி! ரிசர்வ் வங்கி அதிரடி
- IndiaGlitz, [Thursday,June 01 2017]
நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் சேவை பிடிக்கவில்லை என்றால் அந்த வங்கியின் கணக்கை முடித்து கொண்டு வேறு வங்கியில் கணக்கை தொடங்கும் நிலை தான் இதுவரை இருந்தது. ஆனால் இனிமேல் ஒரு வங்கியின் சேவை பிடிக்காவிட்டால் வங்கி கணக்கு எண்ணை மாற்றாமல் வேறு வங்கிக்கு கணக்கை மாற்றி கொள்ளும் புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வேறு வங்கிக்கு கணக்கை மாற்றினால் நம்முடைய முந்தைய பரிவர்த்தனைகள் அனைத்தும் நமக்கு புதிய வங்கியின் மூலம் கிடைக்க்கும். சமீபத்தில் மொபைல் எண்ணை மாற்றாமல் வேறு நிறுவனத்திற்கு மாற்றும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது போன்றே இதுவும் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு எண்ணை வேறு வங்கிக்கு மாற்றிக்கொள்ளும் இந்த புதிய வசதி டிஜிட்டல் வங்கி சேவை மூலம் சாத்தியமாகும் என்று ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எஸ்.எஸ்.முத்ரா தெரிவித்துள்ளார். ஒரு வங்கியின் வாடிக்கையாளரின் ஆதார் அட்டையை அடிப்படையாக வைத்து இந்த மாற்றம் செய்யப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யுஐடிஏஐ துணை இயக்குநர் ஜெனரல் சம்னேஷ் ஜோஷி கூறுகையில், வங்கிக்கணக்கு மாற்றும் வசதியைப் பொறுத்தவரை, ஆதார் நிரந்தர நிதி முகவரியாக கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த சேவை நடைமுறைக்கு வந்தால் வாடிக்கையாளர்களை அலட்சியப்படுத்தும் வங்கி அதிகாரிகளின் நடவடிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.