விஷால் புகார் குறித்து கூலான பதில் கூறிய ஆர்பி செளத்ரி!

  • IndiaGlitz, [Friday,June 11 2021]

நடிகர் விஷால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை தி நகரில் உள்ள காவல்துறை இணை ஆணையரிடம் தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி மீது புகார் ஒன்றை அளித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த புகாரில் தான் வாங்கிய கடனை திருப்பி கொடுத்த பின்னரும் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி தான் கொடுத்த ஆவணங்களை திருப்பி தர மறுப்பதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்

இந்த நிலையில் விஷாலின் புகார் குறித்து தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி கூறியபோது ’இரும்புத்திரை’ என்ற படத்திற்காக விஷால் என்னிடமும் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்களிடமும் பணம் வாங்கி இருந்தார். அதற்கு உத்தரவாதமாக சில ஆவணங்களை அவர் கொடுத்திருந்தார். அந்த ஆவணங்களை நான் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்களிடம் கொடுத்து இருந்தேன். அவருடைய கொடுக்கல் வாங்கல் கணக்குகளை எல்லாம் இயக்குனர் சிவக்குமார் என்பவர் தான் கவனித்து வந்தார். அதனால் திருப்பூர் சுப்பிரமணியம் விஷாலின் ஆவணங்களை அவரிடம் கொடுத்து வைத்திருந்தார்

இந்த நிலையில் திடீரென இயக்குனர் சிவக்குமார் இறந்து விட்டதால் அவர் அந்த ஆவணங்களை எங்கே வைத்திருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் விஷால் என்னிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டதை அடுத்து அவருக்கு நாங்கள் என்.ஓ.சி அளிக்கவும் முன்வந்தோம். இதனால் எந்த பிரச்சனையும் வராது. இருப்பினும் விஷால் எங்களை நம்ப மறுக்கிறார். உண்மையில் அந்த ஆவணங்கள் எங்கு இருக்கிறது என்று தெரியாது. இந்த புகார் ஒரு சாதாரண விஷயம் தான், பெரிதுபடுத்த தேவையில்லை’ என்று தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி கூலாக கூறியுள்ளார்.