கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு தமிழக வீரர் அஸ்வின் காரணமா?
- IndiaGlitz, [Tuesday,September 28 2021] Sports News
இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மீது சரமாரியாக பல்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்குப் பின்பு டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அவர் அறிவிப்பு வெளியிட்டார்.
மூத்த வீரர் ஒருவர் பிசிசிஐயிடம் தெரிவித்த புகார்தான் இந்த அறிவிப்புக்கு காரணம் என்று சில தகவல்கள் அப்போதே கசிந்தன. இந்நிலையில் அந்தப் புகாரை தமிழக வீரர் அஸ்வின்தான் தெரிவித்தார் என்பதுபோன்ற தகவல் வெளியாகி இருக்கிறது. கிரிக்கெட் அடிக்கடர் எனப்படும் பிரபல செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான உலக டெஸ்ட் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் உத்வேகமாக விளையாடவில்லை என்று அஸ்வினை கேப்டன் கோலி கடிந்து கொண்டதாகவும் இதனால் இந்திய அணியில் பாதுகாப்பாற்ற நிலையை உணருவதாக பிசிசிஐயிடம் அஸ்வின் புகார் அளித்தாகவும் தகவல் கூறப்படுகிறது.
இதையொட்டித்தான் கோலி இங்கிலாந்துக்கு எதிரான 4 டெஸ்ட் தொடர் போட்டிகளில் அஸ்வினை ஆடவிடாமல் கிரவுண்டுக்கு வெளியே உட்கார வைத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் டி20 உலகக்கோப்பை போட்டித் தொடருக்கான வீரர்களின் பெயர் பட்டியல் வெளியான சில நாட்களில் கேப்டன் விராட் கோலி இந்தப் போட்டிக்குப் பின் கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டார்.
இதனால் கேப்டன் கோலியின் கேப்டன் பதவி விலகலுக்கு அஸ்வின் கொடுத்த புகார்தான் காரணம் என்றும் விராட் கோலி டி20 உலகக்கோப்பை போட்டியில் அஸ்வினுக்குப் பதிலாக யுவேந்திர சாஹலையே தேர்ந்தெடுத்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படியான தகவல்களுக்கு மத்தியில் பிசிசிஐ ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான கேப்டன் பதவியில் இருந்து கோலியை நீக்கிவிட்டு விரைவில் ரோஹித் சர்மாவை நியமிக்க இருப்பதாகவும் சில தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.