ஐசிசி விருது பட்டியலில் தமிழக வீரர்… உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஐசிசி 2021 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களின் பட்டியலில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பிடித்து ரசிகர்கள் மத்தியில் கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் கடந்த 2017 இல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு போட்டியில் காயம் ஏற்பட்ட நிலையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டார். பின்பு ஐபிஎல் போட்டிகளில் கவனம் செலுத்திவந்த நிலையில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக களம் இறங்கினார். இதைத்தொடர்ந்து இங்கிலாந்து, நியூசிலாந்து, தற்போது தென்னாப்பிரிக்கா என டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தி வருகிறார்.

மேலும் வரும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் இவர் விளையாடுவார் என்றே கருதப்படுகிறது. இந்நிலையில் ஐசிசி வழங்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியலில் இடம்பெற்ற 4 வீரர்களுள் ஒருவராக அஸ்வினும் இருக்கிறார்.

ஐசிசி கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு ஆண்டும் 13 பிரிவுகளில் சிறந்த வீரர்களை தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இந்த ஆண்டு 15 டெஸ்ட்களில் விளையாடி 1078 ரன்களை விளாசியிருக்கிறார். அதில் 6 சதம். மேலும் சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்தவரும் இவர்தான்.

அடுத்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கெயில் ஜேமிசன் இந்த ஆண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்து 27 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அடுத்து இலங்கை வீரர் திமுத் கர்ணாத்னே இந்த ஆண்டு 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 902 ரன்களை குவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் 4 சதம்.

இதைத்தொடர்ந்து தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் பேட்டிங்கில் 1 சதத்தையும் அவர் விளாசியிருக்கிறார். இதையடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களுக்கான பட்டியலில் 4 வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டு உள்ளனர். இதில் யார் விருதைப் பெறுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடம் ஏற்பட்டு இருக்கிறது.