கேப்டன் பதவி கிடைக்காததற்கு இதுதான் காரணமா? ரவிச்சந்திரன் அஸ்வின் கூறிய அதிர்ச்சி தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியக் கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருந்து நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் தனக்கு இந்தியக் கிரிக்கெட் அணியில் கேப்டன் பதவி கிடைக்காததற்கு என்ன காரணம் என்பது குறித்து முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார். அவருடைய கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகி இருக்கிறது.
இந்தியக் கிரிக்கெட் அணியில் மூத்த வீரராக இருந்துவரும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஐசிசி போட்டிகளில் அதிக வாய்ப்பு கொடுக்கப்படுவது இல்லை என்ற விமர்சனம் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பிளேயிங் 11இல் அஸ்வின் இடம்பெறவில்லை. இதுகுறித்து மூத்த வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சனம் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தற்போது இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி ஏன் தனக்கு வழங்கப்பட வில்லை என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது 2022 இல் முன்னாள் கேப்டன் விராட் கோலி பதவி விலகியதைத் தொடர்ந்து புது கேப்டன் பதவிக்கு கே.எல்.ராகுல், ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பந்த் மற்றும் ரோஹித் சர்மாவின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஐந்தாவதாக ரவிச்சந்திரன் அஸ்வினின் பெயரும் சிலரால் பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால் மற்றவர்களை முந்திக்கொண்டு ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் மூத்த வீரராக இருந்து இந்தியக் கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு பல இடங்களில் உதவிய அஸ்வினின் பெயர் எங்கேயும் பெரிய அளவில் பேசப்படவில்லை.
இதற்குக் காரணம் நான் அதிகமாகப் பேசுவதும் சிந்திப்பதும்தான் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். நான் அதிகமாகச் சிந்திப்பதாகத் தெரிவதால்தான் கேப்டன் பதவியை இழந்தேன். நிறையே பேர் என்னை அதிகமாக சிந்திப்பவன் என்றே கூறுகின்றனர். 15-20 போட்டிகளில் விளையாடும் ஒரு வீரர் அதிகமாகச் சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால் 2 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்றால் ஒரு நபர் மன உளைச்சலுக்கு ஆளாவார்.
மேலும் அது என் வேலை என்பதால் அதிகமாக யோசிக்கிறேன். இது என் பயணம் எனவே இதுவே எனக்குப் பொருத்தமானது என்றும் யாராவது என்னிடம் நீங்கள் 15 போட்டிகளில் விளையாட போகிறீர்கள், அதிகம் கவனிக்கப்படுவீர்கள், நீங்கள்தான் வீரர்களுக்குப் பொறுப்பு, கேப்டன் பதவியில் இருக்கிறீர்கள் என்றும் சொன்னால் நான் ஏன் சிந்திக்க வேண்டும் என்றும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் சக வீரர்கள் பற்றி பேசிய அவர் முன்பு நண்பர்களாக இருந்தவர்கள் கூட தொழில்முறையில் தங்களை முன்னேற்றிக் கொண்டு தற்போது சக வீரரர்களாக மாறிவிட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம்பெறாதது குறித்து பேசிய அவர் நான் போட்டியில் விளையாட விரும்பினேன். காரணம் நான் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கு பல்வேறு வகைகளில் பங்களித்திருக்கிறேன். இதற்கு முன்பு நடந்த உலகக் கோப்பை டெஸ்ட் இறுதிப் போட்டியிலும் நன்றாகப் பந்துவீசி 4 விக்கெட்டை வீழ்த்தி இருந்தேன். ஆனால் இந்த முறை நான் அணியில் இருக்க மாட்டேன் என்றும் 48 மணி நேரத்திற்கு முன்பே தெரியும் என்றும் பல்வேறு விஷயங்களை வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறாதது குறித்து ஏற்கனவே ரசிகர்களும் பிரபலங்களும் விமர்சித்து வரும் நிலையில் கேப்டன் பதவி கிடைக்காததற்கு இதுதான் காரணம் என்று அவரே விளக்கம் அளித்திருக்கும் இந்தத் தகவல் தற்போது ரசிகர்களிடையே பேசபொருளாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments