பிரபல குணசித்திர நடிகரின் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!
- IndiaGlitz, [Saturday,April 25 2020]
பிரபல மலையாள குணச்சித்திர நடிகர் ரவி வல்லத்தோல் அவர்களின் மறைவிற்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த 1987ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகிய நடிகர் ரவி வல்லத்தோல், அதன் பின்னர் காட்பாதர், சர்கம், நாலு பெண்கள், இடுக்கி கோல்ட், சதுரங்கம், ஹிட்லர் பிரதர்ஸ் உள்பட பல படங்களில் நடித்தார். திரைப்படங்களில் மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களிலும் அவர் குணசித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். குறிப்பாக அமெரிக்கன் ட்ரீம்ஸ்’ என்ற சீரியல் இவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்ததோடு கேரள அரசின் சிறப்பு விருதையும் பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த ரவி வல்லத்தோல் வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67. மறைந்த ரவி வல்லத்தோல் அவர்களுக்கு கீதாலட்சுமி என்ற மனைவி மட்டும் உண்டு என்பதும் இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்றும் குறிப்பிடத்தக்கது.
ரவி வல்லத்தோல் மறைவு குறித்து கேரள முதல்வர் தரப்பில் கூறும்போது ’நடிக்கும் கதாபாத்திரங்களை மிகவும் சிறப்பாக செய்யும் திறமையான நடிகர் என்றும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.