Director Ramkuma's research work and grip on his subject makes one want more of him in the future in such diverse genres... 2018 | U/A (India)
ராட்சசன்: திரைவிமர்சனம் - ரசிக்க வைக்கும் த்ரில்லர்
'முண்டாசுப்பட்டி' என்ற முழுநீள காமெடி படத்தை இயக்கிய இயக்குனர் ராம்குமார் அதே ஹீரோவை வைத்து முதல் படத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட த்ரில்லர் களத்தை தேர்வு செய்து 'ராட்சசன்' என்ற படத்தை கொடுத்துள்ளார். முதல் பட வெற்றியை இயக்குனர் தக்க வைத்து கொள்வாரா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.
சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்பது விஷ்ணுவின் வாழ்நாள் கனவு. அதிலும் ஒரு சைக்கோ த்ரில்லர் படம் எடுக்க வேண்டும் என பல வருடங்கள் உலகம் முழுவதும் நடந்த சைக்கோ கொலைகளை ஆய்வு செய்து பல தகவல்களை திரட்டி வைத்துள்ளார். ஆனால் சினிமா சான்ஸ் கிடைக்காததால் வேறு வழியின்றி தனது அக்காள் கணவர் முனிஷ்காந்த் அறிவுரையின்படி போலீசில் சேருகிறார். அவர் போலீசில் சேர்ந்தவுடன் கிடைக்கும் முதல் வழக்கே சைக்கோ கொலைகாரன் குறித்துதான். 15 வயது பள்ளிச்சிறுமிகளை தேர்வு செய்து வரிசையாக கொலை செய்து வரும் சைக்கோ கொலைகாரனை பிடிக்கும் பொறுப்பு விஷ்ணுவின் மேலதிகாரியான சூசன் வசம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த கொலைகாரனை பிடிக்க, தான் ஏற்கனவே சினிமாவுக்காக ஆய்வு செய்து வைத்த ஐடியாக்களை சூசனிடம் கூறுகிறார் விஷ்ணு. ஆனால் சூசன் ஈகோ காரணமாக அதனை காதில் வாங்காமல் தன்னுடைய இஷ்டப்படி விசாரணை செய்கிறார். இதனால் கொலைகள் தொடர்கிறது. இந்த நிலையில் முனிஷ்காந்தின் மகளும் சைக்கோ கொலைகாரனிடம் சிக்க, மேலதிகாரியின் உத்தரவையும் மதிக்காமல் தானே களமிறங்கும் விஷ்ணு, கொலைகாரனை கண்டுபிடித்தாரா? சூசன் அதற்கு ஒத்துழைத்தாரா? என்பதுதான் மீதிக்கதை.
போலீஸ் வேடத்திற்கு கச்சிதமான பொருத்தம் இல்லை என்றாலும் விஷ்ணு நடிப்பில் குறை வைக்கவில்லை. சைக்கோ கொலைகாரன் தன்னுடைய வீட்டு சிறுமியையே கடத்தியவுடன் ஆவேசத்துடன் களமிறங்குவதும், அமலாபாலிடம் மெல்லிய காதலை தெரிவிப்பதும், பலமுறை கொலைகாரனை நெருங்கி கோட்டை விட்டபோது அதிர்ச்சி அடைவதும், மேலதிகாரி சூசனிடம் அவமானப்படும்போது உள்ளுக்குள் பொங்குவதும் என விஷ்ணுவின் நடிப்பில் மெருகேறியுள்ளது.
திசை மாறாமல் இருந்திருக்க வேண்டிய இந்த த்ரில்லர் கதை அமலாபால் கேரக்டரால் கொஞ்சம் தடுமாடுகிறது. காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் கதைக்கு அமலாபாலின் காதல் போர்ஷன் தேவைதானா? என்று நினைக்க வைத்தாலும் இந்த காதல் போர்ஷன் குறைந்த காட்சிகளுடன் முடிவது ஒரு நிம்மதியே.
முனிஷ்காந்தின் காமெடி நடிப்பும், தனது மகளுக்கு ஏற்பட்ட நிலையை கண்டு அதிர்ச்சி அடையும் நடிப்பும் சூப்பர். இன்னும் தமிழ் சினிமா இவரை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என தெரிகிறது.
காளி வெங்கட் ஒருசில காட்சிகளில் தோன்றினாலும் மனதில் நிற்கிறார். அதிக வசனம் பேசாத வில்லன், அவருடைய அம்மா கேரக்டர், ஒரே காட்சியில் வந்தாலும் மனதில் நிற்கும் ராதாரவி, மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் குறிப்பாக அமலாபால் அக்காள் மகளாக நடித்திருக்கும் சிறுமி என அனைவரையும் சரியாக வேலைவாங்கியுள்ளார் இயக்குனர் ராம்குமார்.
ஜிப்ரானின் இசையில் ஒரு த்ரில்லர் படத்திற்கு தேவையான மிரட்டும் பின்னணி இசை அதிர வைக்கின்றது. சோகக்காட்சியின்போது அவ்வப்போது பின்னணியில் வரும் பாடல்களும் கேட்கும் வகையில் உள்ளது. கொலைகாரன் பயன்படுத்திய இசை குறித்து விளக்கும் ஒரு காட்சியில் ஜிப்ரான் நடித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பி,.வி.சங்கரின் ஒளிப்பதிவு த்ரில் காட்சிகளை கண்முன் கொண்டு வந்து பயமுறுத்துகிறது. எடிட்டர் சான் லோகேஷ், படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம், 169 நிமிடங்கள் என்பது கொஞ்சம் நீளம்தான்.
ஒரு சைக்கோ த்ரில்லர் கதையை கச்சிதமாக திரைக்கதை அமைத்ததில் இயக்குனர் ராம்குமார் பாதி வெற்றி பெற்றுவிட்டார். ஆங்காங்கே சின்னச்சின்ன திருப்பங்கள், டுவிஸ்ட்டுகள் வைத்துள்ளது இயக்குனரின் திரைக்கதையில் தெரியும் புத்திசாலித்தனம். குறிப்பாக சைக்கோவால் கொல்லப்படுவார் என யூகித்து போலீஸ் ஒரு சிறுமியை ஃபாலோ செய்ய, பின்னர் அந்த சிறுமி தாங்கள் டுவின்ஸ் என்றும், தனது சகோதரிதான் நீங்கள் தேடும் நபர் என்று கூறுவதும் சரியான டுவிஸ்ட். அதேபோல் கொலையாளி யார்? என்பதை பார்வையாளர்களை ஒருபக்கம் யூகிக்க வைத்து பின்னர் திடீரென கொலையாளி இன்னொருவர் என புதிரை அவிழ்க்கும்போது ஒரு சிறிய ஆச்சரியம். இருப்பினும் கொலையாளி யார்? என்பதை படம் முடிவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே தெரிவித்துவிட்டு அவரை பிடிக்க படத்தின் நீளத்தை கொஞ்சம் அதிகரித்திருப்பது ஒரு குறையாக பார்க்கப்படுகிறது. காளிவெங்கட் இடம் கொலையாளி சிக்கும்போதே படத்தை முடித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. அதேபோல் உயரதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை என்ற வகையில் பல படங்கள் வந்துவிட்டது. இந்த படத்தில் ஒரு மாறுதலுகாக சூசன் கேரக்டர் விஷ்ணுவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் அமைந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். முடிவில் சூசன் எல்லா பெருமைகளையும் தட்டி செல்வதும் பல படங்களில் பார்த்த காட்சி தான். இருப்பினும் காட்சிக்கு காட்சி சீட் நுனியில் பார்வையாளர்களை உட்கார வைத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் 'சிகப்பு ரோஜாக்கள்', நூறாவது நாள்', 'அஞ்சாதே' வரிசையில் த்ரில் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு ஒரு அருமையான விருந்து இந்த 'ராட்சசன்' திரைப்படம்.
Comments