சொந்த குடும்பத்தை மீட்க முடியவில்லை… மன வேதனையில் கிரிக்கெட் வீரர் ரஷீத்கான்!

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நட்சத்திரக் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் தன்னுடைய குடும்பத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்க முடியாமல் போய்விட்டது என கடும் வேதனையை வெளியிட்டு உள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிவிட்ட தாலிபான்கள் தற்போது அங்கு புது அமைச்சரவையை உருவாக்க உள்ளனர். இதனால் பொருளாதார, வர்த்தக காரணங்களுக்காக உலக நாடுகளிடையே கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மக்களின் எதிர்காலம் என்னவாகும்? அவர்களுடைய உரிமைகள் பறிபோகிவிடுமோ? என்ற அச்சத்தில் ஒட்டுமொத்த ஊடகமும் ஆப்கானிஸ்தான் செய்திகளை விரிவாக அலசி வருகின்றன.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் வசித்துவரும் தன்னுடைய சொந்த குடும்ப உறுப்பினர்களை அங்கிருந்து என்னால் மீட்கமுடியவில்லை என்று ஆப்கானிஸ்தான் நட்சத்திரக் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் தெரிவித்து இருப்பது ரசிகர்களிடையே கடும் மன வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆபானிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஸ்பின்னராக இருந்துவரும் ரஷீத் கான் நம்முடைய ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஹண்ட்ரட் கிரிக்கெட்டில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

முன்னதாக தாலிபான்களின் செயல்பாட்டை விமர்சித்த ரஷீத் கான், உலகத் தலைவர்களை நோக்கி ஆப்கானை கைவிட்டு விடாதீர்கள் என்று அறைகூவல் விடுத்து இருந்தார். ஆனால் இவருடைய குரலுக்கு வளர்ந்த நாடுகள் எதுவும் செவிசாய்க்காத நிலையில் தற்போது தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களது பிடிக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் இப்போதே மக்கள் கையில் இருக்கும் ஆயுதங்களை சோதனையிட்டு திரும்ப பெற்றுக்கொள்வதாகக் கூறப்படுகிறது. இத்தனை இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் என்னுடைய குடும்ப உறுப்பினர்களை மீட்க முடியவில்லையே என்று கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் மன வேதனை அடைந்துள்ளார்.

இதுகுறித்த தகவல்களை இங்கிலாந்து கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் செய்தியாளர்களிடம் கூறியதோடு அழுத்தமான சூழலிலும் ஹண்ட்ரட் கிரிக்கெட்டிற்காக ரஷீத் கான் சிறப்பாக விளையாடி வருகிறார். இது உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைக்கிறது எனத் தெரிவித்து உள்ளார்.