இந்திய மண்ணில் தரையிறங்கிய ரஃபேல் ரக விமானங்கள்!!! இதன் சிறப்பம்சம் என்னென்ன???
- IndiaGlitz, [Wednesday,July 29 2020]
இந்தியா பாதுகாப்புத் துறையின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பான ரஃபேல் ரக விமானங்களுக்கான ஒப்பந்தம் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ நிறுவனத்துடன் மேற்கொள்ளப் பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி 36 ரஃபேல் ரக விமானங்களை இந்தியப் பாதுகாப்புத் துறை வாங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த ஒப்பந்தத்தின் முதல் தொகுதியாக 5 விமானங்களை தஸ்ஸோ நிறுவனம் தற்போது இந்தியாவிற்கு அனுப்பி வைத்திருக்கிறது. இந்த விமானங்கள் இந்தியாவிற்கு பயணித்து வந்த கதையே தற்போது இந்தியர்களுக்கு மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தஸ்ஸோ நிறுவனம் பிரான்ஸின் பாடோ நகர் பகுதியில் உள்ள மேரிங் நாக் என்ற விமானத் தளத்தில் இருந்து இந்த விமானத்தை இந்தியாவிற்கு அனுப்பத் திட்டமிட்டது. மேரிங் நாக் விமானத் தளத்திற்கும் இந்தியாவிற்கும் சரியாக 7 ஆயிரம் கி.மீ. தொலைவு இடைவெளி என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நேரடியாக இல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஸின் ஒரு விமானத் தளத்தில் எரிபொருளை நிரப்பி விட்டு மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பப் திட்டமிடப்பட்டது. அதன்படி மேரிங் நாக் விமான நிலையத்தில் இருந்து 6,574 கி. மீ தொலைவுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அல் தாப்ரா விமானத் தளத்திற்கு நேற்று முன்தினம் இரவு இந்த 5 விமானங்களும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்தப் பயணத்திற்கு நடுவில் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த ஏர் பஸ் 300 விமானம் மூலம் நடுவானில் இருந்தபடியே 5 விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்பப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அல் தாப்ரா விமானத் தளத்தில் இருந்து இந்தியாவின் ஹரியாணா மாநிலம் அம்பாலா விமானத் தளத்திற்கு அனுப்பத் திட்டமிடப்பட்டது. இரண்டிற்கும் இடைய 2,300 கி.மீ தூரம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஃபேல் விமானங்கள் பயணத்தைத் தொடங்கி பின்பு நடுவானில் இருந்தபடியே ஐஎல் 78 என்ற இந்திய விமானத்தின் மூலம் ரஃபேல் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப் பட்டது. அப்படி தொடங்கிய பயணம் 7 ஆயிரம் கி.மீ தூரத்தைக் கடந்து இன்று பிற்பகலில் அம்பாலா விமான தளத்தை வந்தடைந்தது.
ரஃபேல் விமானத்தில் உள்ள ஆயுதங்களை உபயோகப்படுத்தவும் இந்த விமானங்களை இயக்கவும் இந்திய விமானப் படையினருக்கு பயிற்சி வழங்கப்படும் எனவும் பாதுகாப்பு துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் பயிற்சிகள் முடிக்கப்பட்டு ரஃபேல் ரக விமானங்கள் இந்திய விமானத்துறைக்கு வழங்கப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அநேகமாக ஆகஸ்ட் மாதத்தில் ஒப்படைக்கப் படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரக விமானங்கள் அனைத்து ஒரே மாதிரியானவை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு இருக்கை மற்றும் இரு இருக்கைகள் கொண்ட விமானங்களும் அடங்கும்.
இருவகை விமானங்களையும் அடையாளப்படுத்தும் விதமாக விமானங்களில் எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளன. ஒரு இருக்கை கொண்ட விமானத்தில் முன்னாள் விமானப் படைத் தளபதி பிரேந்தர் சிங்க் தனேவ்வின் இன்ஷியல் பொறிக்கப் பட்டுள்ளது. இரு இருக்கை கொண்ட விமானங்களில் ரஃபேல் ரக விமானங்களை இந்தியா வாங்குவதற்கு காரணமான தற்போதைய விமானப்படைத் தளபதி பாதெளரியாவின் இன்ஷியலை குறிக்கும் விதமாக R.K எனப் பொறிக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அனைத்து ரஃபேல் ரக விமானங்களிலும் இரட்டை இன்ஞ்சின்கள் பொருத்தப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக இந்தியா 58 ஆயிரம் கோடி ரூபாயில் 36 விமானங்களுக்கான ஒப்பந்தத்தை போட்டிருக்கிறது.
தற்போது வரை தஸ்ஸோ நிறுவனம் 10 ரஃபேல் ரக விமானங்களைத் தயாரித்து இருப்பதாகவும் அதில் 5 விமானங்கள் இந்தியாவிற்கு அனுப்பட்டு இருக்கிறது, மற்றுமுள்ள 5 விமானங்கள் பிரான்ஸ் நாட்டில் பயிற்சிக்காக உபயோகப்படுத்தப் படவிருக்கிறது என்றும் செய்திகள் தெரிவகின்றன. வருகிற 2021 ஆம் ஆண்டிற்குள் 36 விமானங்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப் பட்டு விடும் எனவும் தஸ்ஸோ நிறுவனம் கூறியதாகவும் செய்திகள் கூறுகின்றன. கார்கில் போரில் சிறப்பு பங்கு வகித்த கோல்டர் எரோஸ் என்ற விமானப்படை அமைப்பின் விமானிகள் ரஃபேல் ரக விமானங்களை இயக்க பயிற்சி பெறுவார்கள் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த அமைப்பு 1951 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது என்றும் விமானப்படையில் மிக் 21 போர் விமானங்கள் நீக்கப்பட்ட பிறகு, அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த அமைப்பு கலைக்கப்பட்டது. தற்போது ரஃபேல் விமானங்களுக்காக மீண்டும் அந்த அமைப்பு உயிர்ப்பித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.