'காளி'தான் கபாலியின் இன்ஸ்பிரஷன். இயக்குனர் ரஞ்சித்
- IndiaGlitz, [Sunday,October 04 2015]
அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய இரண்டே படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித், மூன்றாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கும் அளவுக்கு உயர்ந்ததை கோலிவுட் திரையுலகமே ஆச்சரியப்பார்வை பார்த்து வரும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் 'கபாலி' குறித்தும் ரஜினியின் கேரக்டர் குறித்தும் ரஞ்சித் மனம் திறந்து பேசியுள்ளார்.
ரஜினி நடித்த படங்களில் தன்னை மிகவும் கவர்ந்த படம் 'முள்ளும் மலரும்' என்றும், மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான மகேந்திரன், அந்த படத்தில் ரஜினியின் கேரக்டரான காளியை அவர் கோபக்காரராகவும், பாசக்காரராகவும் படைத்திருப்பார் என்று கூறிய ரஞ்சித், அந்த காளிதான் இந்த 'கபாலி'யின் இன்ஸ்பிரஷன் என்றும் கூறினார்.
மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு எந்த பஞ்ச் டயலாக்குகளும் இல்லை என்றும் கதையின் ஸ்கிரிப்ட்படி இந்த படத்திற்கு பஞ்ச் டயலாக் தேவையில்லை என்று கூறிய ரஞ்சித், இந்த படத்தின் டைட்டிலான 'கபாலி'யே ஒரு பஞ்ச் டயலாக்தான் என்றும் கூறினார்.
மேலும் ரஜினி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு மிக முக்கிய காரணம், அவருடைய உண்மையான வயதில், நிஜ கெட்டப்பில் இந்த கேரக்டர் இருப்பதுதான் என்றும் ,இந்த படத்தில் ரஜினிக்கு பெரும்பாலான காட்சிகளில் பெரிய அளவில் மேக்கப் எதுவும் இல்லை என்றும் ரஞ்சித் கூறினார்.