கையூட்டு வாங்கிய அரசு அதிகாரி....! வைரலாகும் வீடியோ....!
- IndiaGlitz, [Tuesday,May 25 2021]
நிலத்தை பதிவு செய்ய அரசு அதிகாரி ரமேஷ் என்பவர் லஞ்சமாக ரூ.20 ஆயிரம் கேட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை தாலுகாவில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள சார்பதிவாளர் ரமேஷ் என்பவர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கலவை தாலுக்காவில், மாம்பாக்கம் என்ற ஊரில் வசித்து வருபவர் தான் ஆதிமூலம்(60). அங்குள்ள தனது 2 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு செல்வராஜ், முனிசாமி, ரகுநாதன் என்ற மூன்று மகன்கள் உள்ள நிலையில், தனது பூர்வீக சொத்தான 10 சென்ட் அளவுடைய வீட்டை மகன்களுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார். இதனால் நிலத்தை பிரித்துக்கொடுக்க, பத்திரம் தயார் செய்ய கடந்த ஏப்ரல்-31 ஆம் தேதி, சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். நிலத்தை பார்வையிட்டு, அளந்து கொடுக்க சார்பதிவாளர் ரமேஷ் இடைத்தரகர் மூலம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து முன் பணமாக ரூ.10 ஆயிரத்தை இடைத்தரகர் வேலு மூலம் வாங்கியுள்ளார். 5 நாட்களிலே நிலத்தை அளந்து, பத்திரத்தை தயார் செய்து வைத்துள்ளார் ரமேஷ். மீதி பணத்தைசெலுத்திவிட்டு, பத்திரத்தை பெற்றுக்கொள்ளுமாறு ஆதிமூலத்திடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் சார்பதிவாளர் அலுவலகத்தில், மீதி பணத்தை இடைத்தரகர் வேலு வாங்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆயிரம் சட்டங்கள் வந்தாலும், ஆன்லைன் முறைகள் கொண்டுவரப்பட்டாலும், கிராமப்புறங்களை இது போன்று சில அதிகாரிகள் கையூட்டு வாங்கும் நிலை இன்னும் மாறவே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாக இருந்துவருகிறது.