Rangoon Review
சிறந்த இயக்குனராக முத்திரை பதித்துவிட்டுஏ.ஆர்.முருகதாஸ், ஒரு நல்ல படங்களைத் தரும் தயாரிப்பாளராகவும் ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறார். அந்த வரிசையில் அவர் தயாரித்திருக்கும் படம் ‘ரங்கூன்’, முருகாதாஸுக்கு மட்டுமல்லாமல் அறிமுக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கும். அதன் நாயகன் கவுதம் கார்த்திக்குக்கும் புகழ் சேர்க்கப்போகும் படமாக அமைந்துள்ளது. எப்படி என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.
1980களில் பர்மாவிலிருந்து வட சென்னைக்குப் புலம்பெயர்ந்துவரும் தமிழ்க் குடும்பங்களில் ஒன்றாக வெங்கட் (கவுதம் கார்த்திக்) குடும்பமும் ஒன்று.எண்ணூரில் உள்ள பர்மா காலனியில் குடியேறுகிறார்கள். ஒரு விபத்தில் வெங்கட்டின் அப்பா இறந்துவிடுகிறார்.
வெங்கட் இளைஞனாக வளர்ந்து அவனது நண்பன் குமாரின் சிபாரிசால், பர்மா தமிழர்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பைப் பெற்றிருக்கும் வியாபாரியான சீலா என்னும் குணசீலனிடம் (சித்திக்) வேலைக்குச் சேர்கிறான். வெங்கட்டின் பணி சீலாவை ஈர்க்கிறது. அதோடு அவரது உயிரையும் ஒரு முறை காப்பாற்றுகிறான். இதனால் தன்னுடைய கடை நகை வணிகக் கடை ஒன்றை வெங்கட்டின் பொறுப்பில் விடுகிறார் சீலா.
சீலாவுக்கு ஒரு உடனடிப் பணத் தேவை இருப்பதால் வெளிநாடுகளிலிருந்து தங்கத்தைக் கடத்தில் அதை பர்மாவின் தலைநகர் ரங்கூனில் விற்கும் பொறுப்பை வெங்கட்டிடம் ஒப்படைக்கிறார். வெங்கட்டும் அவனது நண்பர்கள் குமார் மற்றும் டிப்டாப் (டேனியல் ஆணி போப்) ஆகியோர் ரங்கூனுக்கு சென்று தங்கத்தை விற்று பணத்தை வாங்கிவிடுகின்றனர். ஆனால் திடீரென்று பணம் தொலைந்துபோகிறது, இதனால் வெங்கட்டின் வாழ்க்கை புரட்டிப்போடப்படுகிறது
பணத்தை எடுத்தது யார்? அது தெரிவதற்குள் வெங்கட் சந்திக்கும் வேதனையும் இழப்புகளும் என்னென்ன? இறுதியில் வெங்கடுக்கும் அவனது நண்பர்களுக்கும் என்ன ஆகிறது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்கிறது மீதிப் படம்.
ரங்கூன் மனிதர்கள், வட சென்னை பர்மா காலனியில் வாழும் தமிழர்கள், அவர்களின் வாழ்க்கை. தங்கக் கடத்தலின் நுணுக்கங்கள். அதைக் காமாற்றுவதில் உள்ள சவால்கள் என முற்றிலும் புதிய களத்தையும் வாழ்வியலையும் தன் முதல் படத்தில் பதிவுசெய்திருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி. அதற்கு அவர் செலுத்தியுள்ள உழைப்பு கண்முன் காட்சிகளாக விரிந்து பிரமிக்கவைக்கிறது. அதோடு தொடக்கம் முதல் இறுதி வரை தொய்வடையாத அடுத்த என்ன ஆகும் என்று எதிர்பார்க்க வைக்கும் திரைகக்தையை அமைத்திருக்கிறார்.
கதாபாத்திரங்களையும் அவர்களுக்கிடையிலான உறவுகளையும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார். இதனால் பார்வையாளர்களுக்கு அவர்களுடன் தொடர்புபடுத்திக்கொள்வது எளிதாக இருக்கிறது. 1988லிருந்து 2004வரை நடக்கும் கதையில் காலமாற்றமும் அந்தந்தக் காலகட்டத்தை பிரதிபலிக்கும் அம்சங்களும் கச்சிதமாகப் மறு உருவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்தக் காரணங்களால் ‘ரங்கூன்’ படம் முழுதிருப்தி தரும் கமர்ஷியல் படமாக மனதை ஈர்க்கிறது.
சின்னச் சின்னக் குறைகள் உண்டுதான். நாயகன் - நாயகி காதல் காட்களுக்கும் பாடல்களுக்கும் இவ்வளவு திரை நேரத்தைச் செலவழித்திருக்க வேண்டாம். இவ்வளவு யதார்த்தமான படத்தில் நாயகிக்கு நாயகனைக் காதலிப்பதைத் தவிர வேறெந்த வேலையும் இல்லாமல் இருப்பது உறுத்தல். முதல் பாதியின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். கிளைமேக்ஸ் ட்விஸ்ட் ஓரளவு ஊகித்திருக்கக் கூடியதாகவே உள்ளது.
கவுதம் கார்த்திக் இதுவரை நடித்த படங்களில் இதுதான் சிறந்த படம். அவருக்கு முதல் வெற்றிப் படமாக அமையப் போகிறது. இந்தப் படத்தில் ஏற்றிருக்கும் பாத்திரத்துக்காக தனது கெட்டப். தோல் நிறம், பேச்சு என அனைத்தையும் மாற்றியிருக்கிறார். அனைத்து விதமான காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார். நாயகியாக அறிமுகமாகியிருக்கும் சானா மக்புல் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். கொடுத்த வேடத்துக்குப் பொருந்துகிறார்.
குணசீலனாக நடித்திருக்கும் சித்திக் பாத்திரத்துக்குத் தேவையான கண்ணியமான தோற்றத்துடன் வளம் வருகிறார். நாயகனின் அம்மாவாக நடித்திருப்பவர் எமோஷனல் நடிப்பை சரியாகத் தந்திருக்கிறார். நாயகனின் நண்பர்களாக வரும் குமாராக நடித்திருப்பவர் நல்ல நடிகராக மனதில் பதிகிறார். டேனியல் ஆணி போப் நகைச்சுவைக்கு நன்கு பயன்பட்டிருக்கிறார். பர்மா காலனியைச் சேன்ந்த போலீஸ்காரராக நடித்திருக்கும் அறிமுக நடிகர் சிறப்பாக நடித்திருக்கிறார்.
விக்ரம் ஆர்.ஹெச் இசையில் பாடல்கள் அனைத்தும் புதுமையாகவும் ரசிக்கும்படியும் உள்ளன. குறிப்பாக அனிருத் பாடியிருக்கும் ஃபாரினு ரிட்டர்னுதான் பாடல் தாளம்போட வைக்கிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் அனிஷ் தருண் குமாரின் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு வலுசேர்க்கின்றன.
மொத்தத்தில் ’ரங்கூன்’ புதிய கதைக்கள்ம். தொடக்கத்திலிருந்து இறுதிவரை தொய்வடையாத திரைக்கதை,மனதுக்கு நெருக்கமான பாத்திரங்கள் ஆகியவற்றைக் கொண்ட நல்ல திரைப்படம். அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.
- Read in English