அஜித்தின் அரசியல் பார்வை குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்
- IndiaGlitz, [Saturday,June 01 2019]
அஜித்துக்கு அரசியல் பார்வை மட்டுமே இருப்பதாகவும், அரசியல் ஆசை இல்லை என்றும் பிரபல ஊடகவியலார் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருக்கும் தான் பதினைந்து நாட்கள் அஜித்துடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்ததாகவும், இந்த வாய்ப்பின்போது அவரிடம் தான் பல விஷயங்களை மனம் விட்டு பேசியதாகவும், அவருடன் பேசியதில் இருந்து அஜித்துக்கு தெளிவான ஒரு அரசியல் பார்வை இருப்பதை தான் புரிந்து கொண்டதாகவும், அதே நேரத்தில் தனக்கு அரசியல் ஆசை இல்லை என்பதிலும் அவர் தெளிவாக இருப்பதாகவும் ரங்கராஜ் பாண்டே கூறியுள்ளார்.
ஒரு சாதாரண குடிமகனை போலவே அஜித்தும் மத்திய, மாநில அரசின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வருவதாகவும், அனைத்து கட்சிகள் குறித்தும் அதன் தலைவர்கள் குறித்தும் அவர் அறிந்து வைத்திருப்பதாகவும், தன்னுடைய கோபத்தை, அதிருப்தியை அவர் சாமானிய மக்களை போல் ஓட்டு போடும் போது மட்டும் காண்பிப்பதாகவும் ரங்கராஜ் தெரிவித்தார்
மேலும் அஜித் தனக்குள் ஒரு குறுகிய வட்டத்தை ஏற்படுத்தி கொண்டு அந்த வட்டத்திற்குள் இருப்பவர்களிடம் மட்டுமே அவர் தனது மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்வதாகவும், தன்னுடைய நடை, உடை, பாவனைகளில் மிகுந்த கவனம் செலுத்துவதாகவும், தன்னால் ஒரு இளைஞர் கூட திசைமாறி சென்றுவிடக்கூடாது என்பதற்காக அவர் அனைத்து விஷயங்களிலும் அதிதீவிர கவனத்தை செலுத்தி வருவதாகவும் ரங்கராஜ் பாண்டே தெரிவித்தார்.
ஒரு விஷயத்தை செய்யாமல் போனால் கூட பரவாயில்லை, தவறாக செய்துவிடக்கூடாது என்பதுதான் அஜித்தின் முக்கிய கொள்கை. மேலும் அஜித்தின் வாழ்நாள் கனவு என்பது சர்வதேச தரம் வாய்ந்த ஒரு ஸ்போர்ட்ஸ் அகாடமி அமைக்க வேண்டும் என்பதுதான். இளைஞர்களை விளையாட்டின்மீது ஆர்வத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் என்றும் இந்திய இளைஞர்கள் விளையாட்டுத்துறையில் உலக அளவில் சாதிக்க வைக்க தன்னால் முயன்றதை செய்ய வேண்டும் என்பதே அவருடைய கனவாக இருப்பதாகவும் ரங்கராஜ் பாண்டே தெரிவித்தார்.