வெள்ளப் பாதிப்பு… மக்களுக்காக தண்ணீரில் இறங்கிய பிரபல நடிகர்… வைரலான வீடியோ!

  • IndiaGlitz, [Thursday,July 20 2023]

வட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக இன்னும் சில மாநிலங்களில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரியாணாவில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பில் இறங்கி பாலிவுட் நடிகர் ஒருவர் மக்களுக்கு உதவி செய்துவருவது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஹரியாணாவில் பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே வெள்ளச்சேதம் ஏற்பட்டு மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். சில வீடுகளில் மின்சாரங்கள் இன்றியும் அத்யாவசியப் பொருட்கள் இல்லாமலும் மக்கள் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் நடித்து பிரபலமான நடிகர் ரந்தீப் ஹுடா தன்னார்வ தொண்டு நிறுவனமான கல்சா எய்ட் எனும் நிறுவனத்துடன் இணைந்து கொண்டு மக்களுக்கு அத்யாவசியப் பொருட்களை நேரடியாக கொண்டு சேர்த்துள்ளார்.

மேலும் இவர் முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி மக்களுக்காக உணவுப் பொருட்களையும் அத்யாவசியப் பொருட்களையும் அவர்களது வீட்டு கதவைத் தட்டியே கொடுத்து வருகிறார். மழையினால் வீட்டினை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்காகவும் தற்போது உதவி வருகிறார்.

தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடிகர் ரந்தீப் ஹுடா செய்துவரும் சேவையில் அவருடைய காதலியான லின் லைஷ்ராம் இணைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்துப் பேசிய நடிகர் ரந்தீப் என்னுடைய ரசிகர்களும் இயல்புநிலை பாதிக்கப்பட்டு முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு உதவிசெய்ய முன்வர வேண்டும் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொரோனா காலக்கட்டத்தில் பாலிவுட் நடிகர் சோனுசூட் இந்தியா முழுக்க பாதிக்கப்பட்டிருந்த பல லட்சக்கணக்கான மக்களுக்கு உதவிகளைச் செய்திருந்தார். இது மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. சமீபத்தில் மும்பையில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இவர் உதவி செய்தார்.

தற்போது ஹரியாணாவில் பிறந்த நடிகரான ரந்தீப் ஹுடா தன்னுடைய சொந்த மக்களுக்காக முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கிய காட்சி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் மேலாண்மை சம்பந்தப்பட்ட படிப்பில் பட்டம் பெற்ற இவர் கடந்த 2001 இல் வெளியான ‘மான்சூன்வெட்ஸ்‘ திரைப்படத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் தோல்வியைச் சந்தித்த அவர் கடந்த 2010 இல் வெளியான ‘பிவி அர் கேங்ஸ்டர்‘ படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதினை வென்றார்.

தொடர்ந்து ‘ஒன் அபான் எ டைம் இன் மும்பை‘, ‘சாஹேப்‘ போன்ற வரவேற்பு பெற்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த மக்களுக்காக நடிகர் ரந்தீப் ஹுடா களத்தில் இறங்கி இருப்பது அவருடைய ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று அது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.