'பாகுபலி' படத்தில் ரம்யா கிருஷ்ணனின் முதல் முயற்சி

  • IndiaGlitz, [Thursday,July 09 2015]

ரம்யா கிருஷ்ணன் குரல் ஒலிக்கப் போகும் முதல் தெலுங்கு படம் 'பாகுபலி'

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் இந்தி ஆகிய பன்மொழிப் படங்களில் நடித்தவர் ரம்யா கிருஷ்ணன். 1990கள் வரை கதாநாயகியாக இருந்தவர் இப்போது அழகான குணச்சித்திர நடிகையாகக் கலக்கிவருகிறார்.

'படையப்பா' படத்தின் வில்லி நீலாம்பரியாக திரையுலகில் மறுபிரவேசம் செய்த ரம்யா கிருஷ்ணன் அவ்வப்போது சில நல்ல வேடங்களிலில் நடித்துவந்தாலும் நீலாம்பரிக்கு இணையாகப் பாராட்டப்படும் அளவுக்கு எந்தப் பாத்திரமும் அமையவில்லை.

எஸ்.எஸ்.ராஜமவுலி தெலுங்கு-தமிழ் மொழிகளீல் இயக்கியுள்ள 'பாகுபலி' படத்தில் அவருக்கு அப்படிப்பட்ட கனமான பாத்திரம் அமைந்திருக்கிறதாம். வெள்ளி (ஜூலை 10) அன்று உலகெங்குமுள்ள 4,000 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் இந்தப் படத்தில் தனக்கு கிடைத்துள்ள பாத்திரம் இதுவரை இந்திய சினிமாவில் பெண்களுக்குக் கிடைத்திருப்பதிலேயே மிக வலிமையான பாத்திரங்களில் ஒன்று என்றும் படத்தின் கதை தன் பாத்திரத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

அதோடு இவர் பாகுபலி படத்தில் பேசிய வசனங்கள் அவரது குரலிலேயே ஒலிப்பதிவு (டப்பிங்) செய்யப்பட்டிருக்கின்றன. இருபது வருடங்களுக்கு மேலாக தெலுங்கு படங்களில் நடித்துவரும் ரம்யாவின் குரலில் தெலுங்கு வசனங்கள் ஒலிக்கப்போகும் முதல் நேரடித் தெலுங்குப் படம் 'பாகுபலி'தான். இதற்கு முன் கமல ஹாசனுட நடித்த பஞ்சதந்திரம் படத்தின் தெலுங்கு வடிவத்துக்கும் ரம்யா கிருஷ்ணன் சொந்தக் குரலில் டப் செய்தார்.