ரமேஷ் திலக்கை கடவுள் எனக்காகவே அனுப்பியுள்ளார். நவலட்சுமி
- IndiaGlitz, [Tuesday,January 03 2017]
பிரபல நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக், எப்.எம் ரேடியோ ஆர்ஜே நவலட்சுமியை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் ரமேஷ் திலக்கை முதன்முதலில் சந்தித்தது, காதல் ஏற்பட்டது, காதலை புரபோஸ் செய்தது குறித்து பிரபல பத்திரிகை ஒன்றுக்கு நவலட்சுமி பேட்டி கொடுத்துள்ளார். இவர் பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர் ராம்போ ராஜ்குமாரின் மகள் என்பது பலரும் அறிந்திராத உண்மை
அந்த பேட்டியில் ஒரு பிரபல எப்.எம்.இல் வேலைக்கு சேர்ந்த முதல் நாளில் அங்கு ஏற்கனவே வேலை செய்து கொண்டிருந்த ரமேஷ் திலக்கை பார்த்ததாகவும், தன்னை பற்றி மட்டுமின்றி தனது குடும்பத்தையே குறிப்பாக தனது தந்தை அவர் மரியாதையுடன் குறிப்பிட்டது தன்னை கவர்ந்ததாகவும், அந்த முதல் சந்திப்பிலேயே தனது மனதை ரமேஷ் திலக் தொட்டுவிட்டதாகவும் நவலட்சுமி கூறினார்.
முதன்முதலில் ரமேஷ் திலக் காதலை தன்னிடம் புரபோஸ் செய்தபோது, சிலை போல என்ன செய்வது என்று தெரியாமல் ஷாக் ஆகியதாகவும், அதன் பின்னர் சுதாரித்து 'வீட்டில் பேசுங்க' என்று சம்மதம் கூறியதாகவும் கூறினார்.
திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து கொண்டிருப்பதாகவும், விரைவில் நிச்சயதார்த்தம், ஆகஸ்டில் திருமணம் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
ரமேஷ் திலக்கின் நிஜ கேரக்டர் குறித்து நவலட்சுமி கூறியபோது, வீடே உலகம் என்று எந்த டென்ஷனும் இல்லாமல் இருப்பவர் என்றும் இதுதான் இலக்கு என்று இல்லாமல் நல்ல படங்களில் நடித்து பெயர் வாங்க வேண்டும் என்ற கொள்கை உடையவர் என்று கூறினார். மேலும் இயற்கையான நடிப்பை வெளிப்படுத்த கூடியவர், நேர்மை அவருக்கு பிடித்த ஒன்று என்றும், தங்கள் இருவரும் நிறைய விஷயங்கள் ஒத்து போகும் என்றும் கடவுள் தனக்காகவே அவரை அனுப்பியிருப்பதாக தான் நம்புவதாகவும் நவலட்சுமி கூறியுள்ளார்.