ராமர் நேபாளி, உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது: நேபாளம் பிரதமரின் சர்ச்சை கருத்து
- IndiaGlitz, [Tuesday,July 14 2020]
ராமர் பிறந்த இடம் அயோத்தி என்றும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீர வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் பல ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி தற்போதுதான் சாதகமான தீர்ப்பைப் பெற்று உள்ளது. இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கப் பட்டுள்ள நிலையில் திடீரென உண்மையான அயோத்தி நேபாளத்தில் தான் இருக்கிறது என்றும் ராமர் இந்திய கடவுள் அல்ல என்றும், அவர் நேபாள கடவுள் என்றும், நேபாள பிரதமர் சர்மா ஒலி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடவுள் ராமர் நேபாளத்தில் தான் பிறந்தார் என்றும் இந்தியாவில் போலியான அயோத்தியை உருவாக்கி உள்ளனர் என்றும் பிரதமர் சர்மா ஒலி கூறியிருப்பதற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அயோத்தியில் உள்ள இந்து மத குருக்கள் நேபாள பிரதமருக்கு தங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். சராயு ஆற்றுக்கு கிழக்கே ராமர் பிறந்தார் என்று வரலாற்று குறிப்பு உள்ளதாகவும் நேபாளத்தில் சராயு ஆறு ஒன்றே இல்லை என்றும் இந்தியாவில்தான் சராயு ஆறு உள்ளது என்றும் அதனால் ராமர் நேபாளத்தில் பிறந்தார் என்று எப்படி கூற முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்
ஆனால் அதே நேரத்தில் சீதை நேபாளத்தை சேர்ந்தவர் என்றும், அதில் எந்த மாற்றுக்கருத்து இல்லை என்றும் ஆனால் ராமரை நேபாளி என்று கூறுவது தவறு என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் நேபாள பிரதமர் ஒலி ஒரு பைத்தியக்காரர் என்றும் ராமர் உலகிற்கே சொந்தமானவர் என்று அவருக்கு எதிராக நேபாள மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்