மாநில அரசை விமர்சிக்காதது ஏன்? 'தரமணி' இயக்குனர் ராம் விளக்கம்
- IndiaGlitz, [Wednesday,August 16 2017]
பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்த 'தரமணி' திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கோலிவுட் திரைப்படங்களில் வழக்கமான பாணியை முதல்முதலாக உடைத்து வித்தியாசமான கோணத்தில் 'தரமணி' திரைப்படத்தை உருவாக்கிய ராம் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் சென்னையில் நடந்தது. அப்போது ஒரு நிருபர் 'தரமணி' படத்தில் பெரும்பாலும் மத்திய அரசின் கொள்கைகளே விமர்சிக்கப்பட்டுள்ளதாகவும், மாநில அரசை விமர்சிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். அதற்கு இயக்குனர் ராம், மாநில அரசு என்று ஒன்று இருந்தால் தானே விமர்சிக்க முடியும். மத்திய அரசின் கட்டளையை ஏற்று இயங்கும் மாநில அரசு, சுயமாக எந்த முடிவையும் எடுக்காததால் மாநில அரசை விமர்சிக்க விரும்பவில்லை என்று பதிலளித்தார்.
தமிழக அரசு செயல்படும் விதத்தை ஏற்கனவே கமல்ஹாசன், கரு.பழனியப்பன் உள்பட பல திரையுலகினர்களும் விமர்சித்து வரும் நிலையில் மாநில அரசு இந்த விமர்சனத்தை மனதில் கொண்டு சுயமாக, தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.