14வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்!
- IndiaGlitz, [Tuesday,July 25 2017]
இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த் அவர்கள் சற்று முன் பதவியேற்றார். அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கெஹர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
இந்தியாவின் 13வது ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜி அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் மீரா குமாரும், ஆளும் கட்சி சார்பில் ராம்நாத் கோவிந்தும் போட்டியிட்டனர். இதில், ராம்நாத் கோவிந்த் அபார வெற்றிபெற்றார். இதனையடுத்து இன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அடுத்த ஜனாதிபதியாக அவர் பொறுப்பேற்று கொண்டார்.
ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியாக பதவியேற்ற இந்த நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். புதிய ஜனாதிபதிக்கு பிரணாப் முகர்ஜி கைகொடுத்து விடைபெறும் ஜனாதிபதி வாழ்த்து கூறினார்.
புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்று கொண்ட பின்னர் பேசிய ராம்நாத் கோவிந்த், ' பணிவுடன் குடியரசுத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்கிறேன். ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம், பிரணாப் உள்ளிட்ட முன்னாள் குடியரசுத் தலைவர்கள் காட்டிய வழியில் செயல்படுவேன். எனது பணியைத் திறம்பட மேற்கொள்வேன். குடியரசுத் தலைவரின் பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன். இந்தப் பொறுப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி" என்று கூறினார்.