இனி பிரமாண்ட பட இயக்குனர்களுக்கு ஹார்ட் அட்டாக் தான் வரும்: ராம்கோபால் வர்மா

சமீபத்தில் வெளியான கன்னட திரைப்படமான ’காந்தாரா’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தின் வெற்றியால் பிரமாண்ட பட இயக்குனர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் என பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல கன்னட இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ’காந்தாரா’ என்ற திரைப்படம், ‘பொன்னியின் செல்வன்’ ரிலீஸ் ஆன அதே நாளில் தான் ரிலீஸ் ஆனது. இந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி சூப்பர் வசூலை அள்ளி வருகிறது. இந்த படம் வெறும் 20 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட நிலையில் தற்போது 100 கோடியை விட அதிகமாக வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை பார்த்து தனுஷ், கார்த்தி உள்பட பல தமிழ் திரையுலக பிரபலங்கள் பாராட்டிய நிலையில் தற்போது ராம்கோபால் வர்மா இந்த படத்தின் குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் மட்டுமே தியேட்டரில் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற மூட நம்பிக்கையை உடைத்து விட்டார் ரிஷப் ஷெட்டி என்றும் ’காந்தாரா’ திரைப்படம் பிரமாண்ட பட இயக்குனர்களுக்கு ஒரு மிகப்பெரிய பாடம் என்றும் பதிவு செய்துள்ளார்.

மேலும் ரூ.500 கோடி செலவு செய்து பிரமாண்டமாக பட்ஜெட் பட இயக்குனர்களுக்கு இனி ஹார்ட் அட்டாக் தான் வரும் என்று இப்படி ஒரு வெற்றிப்படத்தை குறைந்த பட்ஜெட்டில் எடுக்கலாம் என பாடம் சொல்லிக் கொடுத்த ரிஷப் ஷெட்டிக்கு திரையுலகினர் டியூஷன் பீஸ் கொடுக்க வேண்டும் என்றும் பதிவு செய்துள்ளார். ராம்கோபால் வர்மாவின் இந்த பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.