தூத்துகுடி துப்பாக்கி சூடு: ரஜினியிடம் விசாரணையா?
- IndiaGlitz, [Saturday,August 31 2019]
கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று நடந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகிய நிலையில் இந்த சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரணை செய்து வருகிறது. இந்த ஆணையத்திற்கு மூன்றாவது முறையாக இன்று கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, 'தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை 28 பேர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர்களில் 13 பேர்களிடம் விசாரணை முடிந்துள்ளதாகவும், மேலும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த காவல் துறையினர், காயம் அடைந்த காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர்களிடம் ஆகியோர்களிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள் 'இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ரஜினியிடம் விசாரணை செய்வீர்களா? என்ற கேள்விக்கு 'தேவைப்பட்டால் அவரையும் அழைத்து விசாரணை செய்வோம்' என்று கூறினார்.
தூத்துகுடி துப்பாக்கி சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற ரஜினிகாந்த், 'ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளதாகவும், போலீசை மட்டும் குற்றம் சொல்வது தவறு என்றும், மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது தான் அவர்கள் வேலை என்றும் போலீசை தாக்கியவர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளை உலகிற்கு அடையாளம் காட்ட வேண்டும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.