ஒரே நேரத்தில் 4 படங்களை தயாரிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ்.. மேலும் 2 படங்களை தயாரிக்க திட்டம்..!
- IndiaGlitz, [Tuesday,August 01 2023]
உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் ஒரே நேரத்தில் நான்கு திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இதுகுறித்த போஸ்டர் இந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
இதனை அடுத்து கமல்ஹாசனின் 233 வது படத்தை ஹெச் வினோத் இயக்கி இருக்கிறார். இந்த படத்தையும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் 234 வது திரைப்படத்தையும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் அதேபோல் சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தையும் இந்நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தனுஷ் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தையும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தையும் இதே நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கடந்த 1981 ஆம் ஆண்டு ’ராஜபார்வை’ என்ற திரைப்படத்தை முதலில் தயாரித்தது. அதன் பிறகு ’விக்ரம்’ ’கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ ’சத்யா’ ’அபூர்வ சகோதரர்கள்’ ’தேவர் மகன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்தது. கடந்த ஆண்டு இந்த நிறுவனம் தயாரித்த ’விக்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.