கபாலி டைட்டில் அறிவித்த சிலமணி நேரங்களில் எழுந்த டிரண்டும், பிரச்சனையும்

  • IndiaGlitz, [Tuesday,August 18 2015]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் படத்தின் டைட்டிலை நேற்று இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் அதிகாரபூர்வமாக 'கபாலி' என்று அறிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த டைட்டில் அறிவிக்கப்பட்ட ஒருசில மணி நேரங்களில் பிரபல சமூக வலைத்தளம் ஒன்றில் இந்திய அளவிலும், உலக அளவிலும் இந்த டைட்டில் டிரெண்ட்டுக்கு வந்துவிட்டது. சிலமணி நேரங்களில் ரஜினி ரசிகர்கள் இந்த டைட்டில் குறித்து 15 ஆயிரம் டுவீட்டுகள் பதிவு செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.


இந்நிலையில் ரஜினியின் முந்தைய படமான 'லிங்கா' பிரச்சனை ஒருவழியாக முடிந்து நிம்மதியான ரஜினிக்கு 'டைட்டில்' அறிவித்த சில மணி நேரங்களில் பிரச்சனை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 'கபாலி' என்று அறிவிக்கப்பட்ட இதே பெயரில் மைசூரை சேர்ந்த சிவகுமார் என்பவர் ஒரு படத்தை தயாரித்து அவரே நடித்து வருவதாகவும், அந்த படம் கிட்டத்தட்ட 90% முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் காவ்யா என்ற நடிகை ஹீரோயினியாக நடித்துள்ளாராம்.

ஆனால் இந்த படத்தை அவர் கடந்த பல வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கொண்டு வருவதாகவும், மேலும் சிவா பிக்சர்ஸ் என்ற பெயரில்'கபாலி' என்ற டைட்டிலை அவர் முதலில் பதிவு செய்திருந்தாலும் அதன்பின்னர் முறைப்படி ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து சிவகுமார் கூறும்போது 'நான் இந்த டைட்டிலை புதுப்பிக்க வந்தபோதெல்லாம், அதை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்தனர். இப்போது எனது தலைப்பே பறிபோய்விட்டது, எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை' என்று கூறியுள்ளாராம்.