ரஜினி, விஜய், விக்ரம், விஷால் பட தயாரிப்பாளர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், விக்ரம், விஷால், ஜெயம் ரவி, ஆகியோர் நடித்த திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளரும், பல தெலுங்கு படங்களை இயக்கியவருமான டி. ராமாராவ் காலமானதை அடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த்-பாக்யராஜ் நடித்த ‘நான் சிகப்பு மனிதன், ரஜினிகாந்த் நடித்த ‘அதிசயபிறவி’, விஜய் நடித்த ‘யூத்’, விக்ரம் நடித்த ’அருள்’, விஷால் நடித்த ’மலைக்கோட்டை’ உள்பட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் டி ராமராவ். அதுமட்டுமின்றி தமிழில் சூப்பர்ஹிட் ஆன ’நீதிக்கு தண்டனை’, ‘புலன் விசாரணை’, ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’ ஆகிய படங்களின் தெலுங்கு ரீமேக் உள்பட பல தெலுங்கு திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று டி.ராமராவ் அவர்கள் திடீரென காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 85. தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் டி ராமராவ் அவர்களின் இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணி அளவில் நடைபெறும் என அவரது குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த தயாரிப்பாளர் டி.ராமராவ் அவர்களின் மகன் அஜய்குமாரும் ஒரு தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.