சிஸ்டம் சரியில்லை என்ற சொன்ன ரஜினியின் கருத்து மாறியது ஏன்? அமைச்சர் பேட்டி

  • IndiaGlitz, [Thursday,July 19 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் அரசியலில் குதிக்க உள்ளதாக உறுதி செய்தபின்னர் 'ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளை தேர்வு செய்து அரசியல் கட்சி தொடங்க அடித்தளம் அமைத்து வருகிறார்

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும், ஆன்மீக அரசியல் என்றால் என்ன என்பதை விரைவில் பார்ப்பீர்கள் என்று கூறி வந்த ரஜினிகாந்த், கடந்த சில நாட்களாக தமிழக ஆளும் கட்சிக்கு ஆதரவான கருத்துக்களையே தெரிவித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

காவல்துறைக்கு ஆதரவாகவும், போராட்டங்களுக்கும் எதிராகவும் பேசிய ரஜினிகாந்த் சமீபத்தில் தமிழக கல்வி அமைச்சர் சிறப்பாக செயல்படுவதாகவும் கூறினார். மேலும் கமல்ஹாசன் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்த்து வரும் சென்னை-சேலம் 8 வழிச்சாலை தேவையான ஒன்று என்றும் ரஜினிகாந்த் கருத்து கூறியுள்ளார்.

இந்த நிலையில் ரஜினியின் இந்த மாற்றம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி ஒன்றில் கூறியபோது, 'சிஸ்டம் சரியில்லை என்று சொன்ன ரஜினி எங்களின் ஆட்சியையும் கொள்கைகளையும் புரிந்து கொண்டது வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் ரஜினிகாந்த் கைப்பற்ற போவதாக அரசியல் வதந்திகள் பரவி வரும் நிலையில் இருதரப்பினர்களும் மாறி மாறி ஒருவரை ஒருவர் பாராட்டி வருவது இந்த வதந்திக்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளது.