மீண்டும் ஒரே ஆண்டில் இரண்டு ரஜினி படங்கள்: ரசிகர்கள் குஷி!

  • IndiaGlitz, [Sunday,August 18 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். 2000ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை ரஜினிகாந்த் நடித்த 6 படங்கள் மட்டுமே வெளிவந்தது. அதேபோல் 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை 8 திரைப்படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் ரஜினியின் திரைப்படம் ஒரே ஆண்டில் இரண்டு படங்கள் வெளியாவது அரிதாகவே இருந்தது. கடந்த ஆண்டு மட்டும் 'காலா' மற்றும் '2.0' ஆகிய திரைபடங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமைந்தது

இந்த நிலையில் வரும் 2020ஆம் ஆண்டு மீண்டும் ரஜினிகாந்த் நடித்த இரண்டு திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பருக்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் 'தர்பார்' திரைப்படத்தை முடித்தவுடன் ரஜினிகாந்த் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தை 2020ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எனவே 2018ஆம் ஆண்டு போலவே 2020ஆம் ஆண்டிலும் சூப்பர் ஸ்டாரின் இரண்டு படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதால் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.