இலங்கையில் நடைபெறும் ஈழத்தமிழர் விழாவில் ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Thursday,March 23 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம், தனது அறக்கட்டளையின் சார்பில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு கொடுப்பதற்காக 150 புதிய வீடுகளை கட்டியுள்ளது. இந்த வீடுகளை தமிழர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு தனது கையால் வீடுகளை தமிழர்களுக்கு அளிக்கவுள்ளார். இதுபோன்ற நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த் கலந்து கொள்வது இதுவே முதல்முறை

லைகா நிறுவனர் சுபாஷ்கரன் அல்லிராஜா அவர்களின் தாயார் ஞானாம்பிகை அவர்களின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை வவுனியாவின் சின்ன டம்பம் கிராமம் மற்றும் புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை கட்டியுள்ளது. இந்த வீடுகளின் திறப்பு விழா வரும் ஏப்ரல் 9ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாகவும், இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவுள்ளார் என்றும் லைகா நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரஜினிகாந்திடம் அனுமதி கேட்டபோது அவர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டதக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இலங்கை வடக்கு மாநில முதலமைச்சர் விக்னேஷ்வரன் உள்பட பல இலங்கை தமிழ் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.