'காக்கா' கதையை அடுத்து 'கழுதை' கதை சொன்ன ரஜினிகாந்த்: வேட்டையன் விழாவில் சுவாரஸ்யம்..!

  • IndiaGlitz, [Saturday,September 21 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் ரஜினிகாந்த் சொன்ன கழுதை கதை இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது:

திடீரென்று ஒரு நாள் ஞானவேல் அவர்கள், என்னை பார்க்க வேண்டும் என்று சொன்னபோது, அவரிடம் 'என்ன விஷயம்?' என்று கேட்டேன். அப்போது அவர் 'புவனா ஒரு கேள்விக்குறி’ ’ஆறிலிருந்து அறுபது வரை’ மாதிரி ஒரு படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும்' என்று சொன்னார்.

அப்போது நான் அவருக்கு ஒரு கதை சொன்னேன்: 'இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு டோபி இருந்தார். அவர் ஒரு கழுதையை வளர்த்து வந்தார். ஒருநாள் அந்த கழுதை திடீரென்று காணாமல் போனது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். எதைக் கேட்டாலும் அவர் புலம்பிக் கொண்டே இருந்தார். இதையடுத்து அவரது மனைவியும் குழந்தைகளும் அவரை விட்டு பிரிந்துவிட்டனர்.

அதன் பின்னர், ஒருநாள் அவர் மரத்தடியில் உட்கார்ந்திருந்தார். உடனே எல்லோரும் அவரை சாமியார் என்று நினைத்து அவரிடம் குறி கேட்கத் தொடங்கினர். ஒருநாள் திடீரென்று அவருடைய கழுதை மீண்டும் வந்தவுடன், அவருக்கு எல்லாம் ஞாபகம் வந்தது. உடனே அவர் ‘எங்கே என் கழுதை? எங்கே என் கழுதை?’ என்று கேட்டார். அதை பார்த்த பக்தர்கள், ‘நீங்கள் ஒரு சாமியார், ஏன் இப்படி செய்கிறீர்கள்?’ என்று கேட்டபோது, ‘நான் சாமியார் அல்ல; நான் ஒரு டோபி! என்னுடைய கழுதை தொலைந்ததால் தான் இப்படி ஆகிவிட்டேன்’ என்று கூறினார்.’

அப்போது ஞானவேல் என்னிடம், 'எதற்காக இந்தக் கதையை என்னிடம் சொல்கிறீர்கள்?' என்று கேட்டார். ’புவனா ஒரு கேள்விக்குறி’ ’ஆறிலிருந்து அறுபது வரை’ ‘தளபதி’ படத்தில், எல்லாம் நீங்கள் பார்த்த காட்சிகளுக்கு பின்னால் பல விஷயங்கள் உள்ளன. நான் ’ஆறிலிருந்து அறுபது வரை’ படத்தில் நடிக்க முடியாது என பாதியில் வெளியேறி விட்டேன். அதன்பின்னர் எஸ்பி முத்துராமன் சார், உன்னால எவ்வளவு நடிக்க முடியுமோ, அவ்வளவு நடி என்று சொன்னார். அந்த படத்தில் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதை நான் மட்டும் அறிவேன்.

எனவே, என்னை அந்த மாதிரி நடிக்க வைக்க முயற்சி செய்ய வேண்டாம். இப்போது நான் எப்படிச் செய்கிறேனோ, அதே மாதிரி என்னை நடிக்கவிடுங்கள்’ என்று நான் கூறினேன், என்று ரஜினிகாந்த் அந்த ஆடியோ விழாவில் தெரிவித்தார்.

'ஜெயிலர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், காக்கா கதையை கூறிய நிலையில் தற்போது ’வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கழுதை கதையை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.