ரசிகர் மன்றத்தின் மூலம் அரசியலில் ஜெயித்துவிடலாம் என்பது பைத்தியக்காரத்தனம்: ரஜினிகாந்த்
- IndiaGlitz, [Tuesday,October 23 2018]
ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்து கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால் அவரது புத்தி பேதலித்துள்ளது என்றுதான் அர்த்தம். மக்கள் ஆதரவு இல்லாமல் அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியாது என்று ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இன்று ரஜினிகாந்த் தனது ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியதாவது:
நமது மக்கள் மன்றத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் என் அனுமதி இல்லாமல் நடந்ததாக சிலர் பொய்ப்பிரச்சாரம் செய்து வருவது தவறானது. நிர்வாகிகள் நீக்கப்படுவது எனது கவனத்திற்கு வந்த பிறகே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
நான் ஏற்கனவே கூறியது போன்று பதவி பணம் ஆசை உள்ளவர்கள் அருகில் வர வேண்டாம். அந்த எண்ணத்தோடு இருப்பவர்களை அருகிலேயே சேர்க்க மாட்டேன். அதே நேரத்தில் குடும்பத்தை பராமரிக்காமல் மன்ற பணிகளுக்கு வருபவர்களை வரவேற்க மாட்டேன். சமூக அக்கறை கொண்டவர்களுக்கு மட்டுமே மன்றத்தில் பொறுப்பு வழங்கப்படும்
ஊடகங்கள் மூலமாக நம்மை பற்றி அவதூறுகளை பரப்பி வருபவர்கள் என்னுடைய ரசிகர்களாக இருக்க முடியாது. இப்படிப்பட்ட செயல்களில் நாம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. வீண் வதந்தைகளில் நமது நேரத்தை வீணடிக்க கூடாது. இவ்வாறு ரஜினிகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.