ஆன்மீக அரசியல் என்ன என்று இனிமேல் பார்ப்பீர்கள்: ரஜினிகாந்த் ஆவேச பேச்சு
- IndiaGlitz, [Monday,March 05 2018]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் என்றும் தனது அரசியல் ஆன்மீக அரசியல் என்றும் கூறியதுதான் தாமதம் உடனே அரசியல் கட்சி தலைவர்கள் அவரை விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர். எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியுமா? ஜெயலலிதா இருந்தவரை ஏன் அரசியலுக்கு வரவில்லை, வயதானவுடன் அரசியலுக்கு வருவது ஏன்? ஆன்மீக அரசியல் தமிழகத்தில் எடுபடாது? என்பது உள்பட பல கேள்விகள் ரஜினி முன் வைக்கப்பட்டது. இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் இருந்தது இன்றைய ரஜினியின் சுமார் 40 நிமிட பேச்சு. தெள்ள தெளிவாக, தங்கு தடையின்றி பேசிய அவரது பேச்சின் சில முத்துக்களை மட்டும் இங்கு பார்ப்போம்
அரசியலுக்கு வந்துள்ள என்னை வாழ்த்த வேண்டிய அவசியமில்லை ஏன் கேலி செய்கிறீர்கள். திட்டுகின்ற அரசியை இனி கைவிட்டுவிடுவோம்.
கட்சியை அறிவிக்கும் முன்பே கொள்கை என்ன என்று கேட்பது பெண் பார்க்க செல்லும் முன் திருமண பத்திரிகை எங்கே என்று கேட்பதுபோல் உள்ளது
அரசியலுக்கு யார் வந்தாலும், யாரும் எம்.ஜி.ஆராக முடியாது. அவர் ஒரு தெய்வ பிறவி. அவர் போன்ற ஒரு தலைவர் இனி உருவாக முடியாது. எம்.ஜி.ஆர் கொடுத்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்.
படிக்கும் காலத்தில் மாணவர்கள் அரசியலுக்கு வராதீர்கள். நானே கட்சி ஆரம்பித்தாலும் எனது கட்சிக்கு மாணவர்கள் படிப்பை விட்டுவிட்டு வேலை செய்ய வேண்டாம். ஓட்டு போட வந்தால் மட்டும் போதும்
அரசியல்வாதிகள் தங்கள் வேலையை சரியாக செய்யவில்லை, அதனால்தான் சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
ஜெயலலிதா இருக்கும்போது ஏன் அரசியலுக்கு வரவில்லை, பயமா? என்று கேட்கின்றனர். 96 சம்பவத்தை நான் மீண்டும் நினைவுபடுத்த விரும்பவில்லை. ஒரு ஆளுமை உள்ள தலைமை, ஒரு அரசியல் முதுபெரும் ஞானி ஆகிய இருவரும் அரசியலில் இருந்ததால் நான் வரவேண்டிய அவசியம் இல்லாமல் போனது. ஆனால் இப்போது ஒரு வெற்றிடம் உள்ளது. ஒரு நல்ல தலைவன் இங்கே இல்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பத்தான் வந்துள்ளேன்'
உண்மையான, நேர்மையான, ஜாதிமதமற்ற, அறவழியில் நடப்பதுதான் ஆன்மீக அரசியல். ஆன்மீக அரசியல் என்றால் தூய்மையான அரசியல். இறை நம்பிக்கை இருப்பதுதான் ஆன்மீக அரசியல். இனிமேல் தான் பார்க்க போகிறீர்கள், ஆன்மீக அரசியல் என்றால் என்ன என்பதை?
31ஆம் தேதி அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கூறிய என்னிடம் 29ஆம் தேதி கொள்கை என்னவென்று கேட்டார்கள், அதனால் தலை சுத்துது என்று கூறினேன். இது கல்யாணத்திற்கு பெண் பார்க்க செல்லும்போது, இன்விடேஷன் எனக்கு இன்னும் வரவில்லை என்று கூறுவது போல் இருந்ததால் தலை சுத்துது என்று கூறினேன்