மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை: ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
- IndiaGlitz, [Monday,November 26 2018]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று லதா ரஜினிகாந்த் அவர்களின் அறக்கட்டளை சார்பில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசினார். குழந்தைகள் நலன் குறித்த இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
குழந்தைகள் பூக்களை போன்றவர்கள். குழந்தைகள் தான் பெரியவர்களின் சோகத்தை தீர்க்கும் மருந்தாக உள்ளனர். அப்படிப்பட்ட குழந்தைகளுக்காக மேற்கத்திய நாடுகள் அதிக பணமும், நேரமும் செலவு செய்கின்றன. ஆனால் அதில் ஒரு சதவீதம் கூட இந்தியா செய்வதில்லை. குழந்தைகளின் நலன் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை. எந்த அரசாங்கமும் குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்ததால்தான் என்னுடைய மனைவி இந்த அறக்கட்டளையை குழந்தைகளுக்காக ஆரம்பித்துள்ளார்கள்.
இந்த முயற்சிக்கு டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் ஆதரவு கொடுத்துள்ளன. இனிமேல் அரசை நம்பி பிரயோஜனம் இல்லை. பெரிய பெரிய ஆட்கள் இதற்காக ஒன்றிணைந்து செயல்பட முன்வர வேண்டும். லதாவின் இந்த முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். இதுவரை ரஜினியின் மனைவி லதா என்றுதான் சொல்லி வருகின்றனர். ஆனால் லதாவின் கணவர் ரஜினிகாந்த் என்ற நிலை விரைவில் வரவேண்டும்.
தெருவில் பிச்சை எடுக்கும் குழந்தையை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து அந்த குழந்தைகளின் பின்னால் இருக்கும் மாஃபியாயை கண்டுபிடிக்க எந்த காவல்துறை அதிகாரியும் இதுவரை முன்வரவில்லை. குழந்தைகளை கடத்தி அவர்களை அனாதையாக்கி பிச்சை எடுக்க வைப்பது என்பது ஒரு கொலைக்குற்றத்தை விட கொடுமையானது. அத்தகையை குற்றம் செய்பவர்களை கொலை குற்றத்திற்கு என்ன தண்டனையோ அந்த தண்டனையை அளிக்க வேண்டும்.