முதன்முதலில் நான் தமிழ்நாடு வந்த கதை: ரஜினி கூறிய நெகிழ்ச்சியான கதை
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:
என்னுடைய சிறுவயது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களைவும், நான் எப்படி தமிழ்நாட்டுக்கு முதன்முதலில் வந்தேன் என்பதையும் இங்கே பகிர்ந்துகொள்ள நான் விரும்புகின்றேன்
நான் பள்ளியில் படித்த போது நல்ல மாணவனாக, நன்றாக படிக்கும் மாணவனாக இருந்தேன். ஆனால் என்னை திடீரென பத்தாம் வகுப்பில் ஆங்கில மீடியம் பள்ளியில் சேர்த்து விட்டார்கள். அதனால் நான் கொஞ்சம் திணறி பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தேன். அதன்பின் அடுத்த வருடம் மீண்டும் தேர்வு எழுதி நான் பத்தாம் வகுப்பு பாஸ் ஆனேன்
அதன் பின்னர் நான் எனது சகோதரர்களிடம் என்னை ஏதாவது வேலையில் சேர்த்து விடுங்கள். எனக்கு படிப்பு எல்லாம் சரியாக வராது என்று சொன்னேன். ஆனால் எனது சகோதரர், ‘இல்லை நீ கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும். நம் வீட்டில் வேறு யாரும் படிக்கவில்லை. அதனால் நீ ஒரு டாக்டர் அல்லது ஐபிஎஸ் போன்ற பெரிய படிப்பு படிக்க வேண்டும்’ என்று முடிவு செய்து என்னுடைய விருப்பத்திற்கு மாறாக என்னை பெரிய பணக்காரர்கள் படிக்கும் பள்ளியில் சேர்த்து விட்டனர்
அந்த பள்ளியில் படிக்கும்போது எனக்கு சுத்தமாக படிப்பில் நாட்டமே இல்லை. பணக்கார பசங்களுடன் சேர்ந்து கொண்டு ஊரைச் சுற்றி வந்து, திரைப்படங்கள் பார்ப்பது என்று நான் சுற்றிக் கொண்டிருந்தேன். அப்போது தேர்வு வந்தது. தேர்வுக் கட்டணமாக ரூபாய் 170ஐ எனது சகோதரர் மிகவும் கஷ்டப்பட்டு கடன் வாங்கி என்னிடம் கொடுத்து கட்ட சொன்னார். அந்த பணத்தை கட்டி தேர்வு எழுதினால் நிச்சயம் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்று எனக்கு நன்றாக தெரியும். அதனால் நான் ஒரு முடிவு செய்தேன். அன்று இரவு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி பெங்களூர் ரயில் நிலையம் வந்தேன். அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ரயில் எங்கே செல்கிறது என்று கேட்டபோது, அது தமிழ்நாடு செல்கிறது, மெட்ராஸ் செல்கிறது என்று கூறினார்கள். உடனடியாக நான் அந்த ரயிலில் டிக்கெட் எடுத்து ஏறி படுத்து தூங்கிவிட்டேன்
காலையில் விழித்து பார்க்கும் போது சென்னையில் இருந்தேன். சென்னை ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி நான் வெளியே செல்ல முயன்றேன். அப்போது டிக்கெட் கலெக்டர் என்னிடம் டிக்கெட் கேட்டார். நான் எடுத்த டிக்கெட்டை எங்கேயோ மிஸ் செய்து விட்டதால் அவரிடம் நான் விளக்கம் அளித்தேன். நான் எடுத்த டிக்கெட்டை தொலைத்து விட்டேன். ஆனால் நான் கண்டிப்பாக டிக்கெட் எடுத்தேன் என்று கூறினேன். அதன் பிறகு என்னை ஒரு ஓரமாக நிற்க வைத்துவிட்டு மற்ற பயணிகள் அனைவரும் சென்ற பிறகு என்னிடம் விசாரித்தார். நீ டிக்கெட் வாங்கவே இல்லை பொய் சொல்கிறாய் என்று கூறினேன். அதற்கு நான் உறுதியாக ’நான் பொய் சொல்லவில்லை’ டிக்கெட் வாங்கினேன் ஆனால் தொலைந்துவிட்டது என்று கூறினேன். அதை அவர் ஏற்றுக் கொள்ளாமல் அபராதம் கட்டினால்தான் உன்னை விடுவேன் என்று கூறினார்
அப்போது அங்கு வந்த கூலித்தொழிலாளிகள் டிக்கெட் கலெக்டரிடம் ’அந்த பையனின் முகத்தை பாருங்கள் அவன் பொய் சொல்கிறான் போலவா இருக்கிறான்? அவனை அபராதம் கட்ட சொல்கிறீர்களே. இது நியாயமா? என்று கேட்டு அவர்கள் தங்களிடம் இருந்த காசை எடுத்து எனக்காக அபராதம் கட்டினார். அப்போதே நான் முடிவு செய்துவிட்டேன். இதுதான் எனது ஊர் என்று’ என ரஜினிகாந்த் முதல்முறையாக தமிழகம் வந்த நிகழ்வை கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com