எனது அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் இவர் தான்; ரகசியத்தை உடைத்த ரஜினிகாந்த்..!

  • IndiaGlitz, [Sunday,March 12 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர இருப்பதாக 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் முன்னிலையில் தெரிவித்த நிலையில் 2020 ஆம் ஆண்டு அவர் தனி கட்சி தொடங்குவார் என்றும் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது. அவர் அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டது என்பதும் நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் திடீரென 2021 ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கவில்லை எனக் கூறி மூன்று பக்கம் அறிக்கையை ரஜினிகாந்த் வெளியிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று சென்னையில் தனியார் மருத்துவமனை வெள்ளிவிழா ஒன்றில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் அரசியலுக்கு வராததற்கு இந்த ஒருவர்தான் காரணம் என மருத்துவர் ரவிச்சந்திரன் அவர்களை கூறினார்.

நான் அரசியலில் ஈடுபடலாம் என்று முடிவு எடுத்த நிலையில் கொரோனா முதல் அலை முடிந்து இரண்டாவது அலை வந்து கொண்டிருந்தது. நான் நோய் எதிர்ப்பு சக்திக்காக மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தேன். இந்த நிலையில் அரசியலில் இருந்து பின்வாங்க முடியாது என்று மருத்துவரிடம் கூறினேன். ஆனால் மருத்துவர் ரவிச்சந்திரன் ’நீங்கள் பிரச்சாரம் செய்வது, மக்களை சந்திப்பது இதெல்லாம் கூடாது என்றும் பிரச்சாரம் செய்யும்போது மக்களை மிக அருகில் சந்தித்தால் உங்களை தொற்று பாதிக்கும் என்றும் எச்சரித்தார். வேண்டுமென்றால் பிரச்சாரம் செய்யும் போது 10 அடி தள்ளி நின்று பிரச்சாரம் செய்யலாம் என்றும் ஆனால் மாஸ்க்கை கழட்டவே கூடாது என்றும் அவர் கூறினார்.

ஆனால் இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்பதால் தான் வேறு வழி இன்றி நான் அரசியலில் ஈடுபடும் முடிவில் இருந்து பின்வாங்கினேன். எனவே நான் அரசியல் வேண்டாம் என்று முடிவு எடுத்ததற்கு மருத்துவர் ரவிச்சந்திரனும் ஒரு காரணம் என்று தெரிவித்தார்.