'அண்ணாத்த' படம் பார்த்தவுடன் பேரன்களின் ரியாக்சன்: ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை தனது மகள்கள், மருமகன் மற்றும் பேரன்களுடன் பார்த்ததாக ரஜினிகாந்த் தனது இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் செயலியில் குரல் மூலம் தெரிவித்துள்ளார்.

அந்த குரல் பதிவில், ‘நான், ஐஸ்வர்யா, சவுந்தர்யா, என்னுடைய மனைவி மற்றும் பேரன்கள் ஆகியவர்களுடன் ’அண்ணாத்த’ படத்தை பார்த்தோம். குறிப்பாக சௌந்தர்யா மகன் வேத் என் பக்கத்திலேயே உட்கார்ந்து இந்த படத்தை பார்த்தான். என்னுடைய படத்தை அவன் முதல்முதலில் பார்க்கின்றான் என்பதால் அவன் வாழ்க்கையிலே மறக்க மாட்டான். முழு படத்தையும் மிகவும் விருப்பத்துடன் பார்த்தான். படம் பார்த்து முடித்த உடனே அவன் என்னை கட்டி பிடித்து சில நிமிடங்கள் என்னை விடவே இல்லை. அவ்வளவு சந்தோஷம் அவனுக்கு’ என்று கூறியுள்ளார்.

மேலும் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது கலாநிதி சார் வந்திருந்தார். என்ன சார் நிங்க என நான் கேட்டபோது உங்களை பார்க்கத்தான் வந்தேன் என்று கூறினார். அவ்வளவு பெரிய மனிதர், அவ்வளவு பிசியானவர், என்னை பார்க்க வரவேண்டிய அவசியமே இல்லை, எப்போதுமே மேன்மக்கள் மேன்மக்கள் தான்’ என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.