இரண்டே வருடத்தில் முடித்த சபதம்: ரஜினிகாந்த்தின் உணர்ச்சிகரமான பேச்சு
Send us your feedback to audioarticles@vaarta.com
பைரவி படத்திற்கு பின்னர் நான் ஒரு சில படங்களில் ஹீரோ மற்றும் வில்லனாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் போதே என்னை பட்டிதொட்டியெங்கும் சேர்த்த ஒரு படம்தான் 16 வயதினிலே என்ற படம் தான். அந்த படத்தில் நான் நடித்த பரட்டை என்ற கேரக்டர் எனக்கு பல கோடி ரசிகர்களை பெற்றுத் தந்தது
16 வயதினிலே படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது ஒரு மிகப் பெரிய தயாரிப்பாளர் என்னை அணுகி, தான் ஒரு படத்தை தயாரித்து கொண்டிருப்பதாகவும் அந்த படத்தில் ஒரு மிகப் பெரிய ஹீரோ நடித்துக் கொண்டிருப்பதாகவும், அந்த படத்தில் உங்களுக்கு ஒரு முக்கிய கேரக்டர் என்றும், அந்த கேரக்டரில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றும் கூறினார்
நானும் அதற்கு ஒப்புக்கொண்டு பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கேட்டேன். அவர் ஆறு ஆயிரம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டார் . அதன்பிறகு ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கேட்டபோது நீங்கள் படப்பிடிப்புக்கு வரும்போது ஆயிரம் ரூபாய் தந்து விடுவதாக கூறினார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கும் வரை அவர் அந்த ஆயிரம் ரூபாயை கொடுக்கவில்லை. ஆயிரம் ரூபாய் கொடுக்காமல் நான் நடிக்க முடியாது என்று கூறிய போது அந்த தயாரிப்பாளர் என் மேல் கோபப்பட்டு, உனக்கு என் படத்தில் வாய்ப்பு இல்லை வெளியே போ என்று கூறினார். அதனால் நான் மிகுந்த மன வருத்தத்துடன் ஏவிஎம் ஸ்டூடியோவில் இருந்து நடந்தே என்னுடைய இடத்துக்கு வந்தேன்
நான் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது பலர் என்னை ’இது எப்படி இருக்கு’ ’இது எப்படி இருக்கு’ என்று கேலி செய்தார்கள். பரட்டை எப்படி இருக்கே? என்று என்னைக் கேட்டார்கள். ஏற்கனவே மனம் வெறுப்பில் இருந்த நான், அவர்களது கேள்வியால் மனம் புண்பட்டு அப்பொழுதுதான் ஒரு சபதம் எடுத்தேன். இதே கோடம்பாக்கத்தில் இதே சாலையில் , இதே ஏவிஎம் ஸ்டூடியோவில் நான் ஒரு மிகப் பெரிய ஸ்டாராக ஒரு நாள் உள்ளே நுழைவேன் என்று எனக்குள் சபதம் எடுத்தேன்
அதேபோல் இரண்டே வருடத்தில் ஒரு வெளிநாட்டுக் கார் வாங்கி, அந்த காருக்கு ஒரு வெளிநாட்டு டிரைவரை வேலைக்கு போட்டு, அதே ஏவிஎம் ஸ்டூடியோவில் நான் அவமானப்பட்ட அதே இடத்தில் காரை நிறுத்தி சிகரெட்டை ஸ்டைலாக ஊதினேன். அப்போது அங்கிருந்தவர்கள் எல்லோரும் என்னை மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அதன் பின்னர் அதே காரில் நான் பாலசந்தர் அவர்களின் அலுவலகத்திற்கு சென்றேன். பாலசந்தரிடம் சென்று நான் என்னுடைய காரையை காண்பித்து ஆசீர்வதிக்க சொன்னேன். அவர் என்னுடைய காரையும் என் கார் டிரைவரையும் ஒரு மாதிரியாக பார்த்து ஒன்றுமே பேசாமல் சென்று விட்டார். அதன் பிறகுதான் எனக்கே நான் செய்த தவறு புரிந்தது. அதன் பின்னர் திரும்பவும் வீட்டிற்கு வந்து நடந்ததை யோசித்து பார்த்தேன்
அந்த இரண்டு வருடத்தில் நான் பெற்ற வெற்றி என்னுடைய உழைப்பினால் மட்டும் கிடைத்த வெற்றி அல்ல என்பதை புரிந்து கொண்டேன். எனக்கு வாய்த்த தயாரிப்பாளர்கள், என்னை இயக்கிய இயக்குநர்கள், எனக்கு கிடைத்த கேரக்டர்கள் மற்றும் அனைத்து நான் நடித்த படங்கள் ரிலீஸான நேரம் ஆகியவை தான் என்னை அந்த அளவுக்கு பெரிய ஆளாக ஆக்கியது என்பதை புரிந்து கொண்டேன்’ என்று தன்னுடைய இளமைக்கால நினைவுகளை ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout