ரஜினிகாந்த் ஓட்டு போடாத நடிகர் சங்க தேர்தல்!
- IndiaGlitz, [Sunday,June 23 2019]
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் தன்னால் ஓட்டு போட முடியாத நிலைக்கு வருந்துவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்ய இன்று காலை 7 மணி முதல் தேர்தல் நடைபெறும் பள்ளிக்கு நடிகர், நடிகைகள் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது மும்பையில் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இதனையடுத்து அவருக்கு தபால் ஓட்டு நடிகர் சங்கத்தில் இருந்து அனுப்பப்பட்டது. ஆனால் காலதாமதமாக அவருக்கு தபால் ஓட்டு கிடைத்ததால் அவரால் தனது வாக்கினை பதிவு செய்ய முடியவில்லை. இதுகுறித்து ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது:
நான் இன்று மும்பையில் படப்பிடிப்பில் உள்ளேன். எனக்கு நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு படிவம் தாமதமாக அதாவது நேற்று மாலை 6.45 மணிக்கு கிடைத்தது. இதனால் என்னால் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தபால் வாக்கு படிவத்தை முன் கூட்டியே பெற முயற்சித்தும் தாமதமாக கிடைத்தது. இது போன்ற துரதிர்ஷ்டவசமான நிலை வரும் காலங்களில் ஏற்படக்கூடாது. தாமதமாக தபால் வாக்கு கிடைத்ததால் வாக்களிக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன் என பதிவு செய்துள்ளார்.
நேற்று மாலை 5.30 மணியுடன் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான நேரம் முடிவடைந்தது என தேர்தலை நடத்தும் அதிகாரியான நீதிபதி பத்மனாபன் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
— Rajinikanth (@rajinikanth) June 22, 2019