விஜய் எனக்கு போட்டியா?  'கழுகு காக்கா கதைக்கு விளக்கம் கொடுத்த ரஜினி..!

  • IndiaGlitz, [Saturday,January 27 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’ஜெயிலர்’ திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவின் போது காக்கா கழுகு கதை சொன்ன நிலையில் அதற்கு பதிலடியாக விஜய் ’லியோ’ படத்தின் வெற்றி விழாவில் கூறியதும் இணையதளங்களில் வைரல் ஆனது என்பதும் இதுகுறித்து சமூக வலைதளங்களில் இருதரப்பு ரசிகர்களும் அவ்வப்போது மோதிக்கொள்ளும் காட்சிகளையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’லால் சலாம்’ இசை வெளியீட்டு விழாவில் பேசினார். காக்கா கழுகு கதையை நான் விஜய்யை குறிப்பிட்டது போல சிலர் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை கேட்கும் போது எனக்கு வருத்தமாக இருந்தது.

விஜய் என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த பையன். ’தர்மத்தின் தலைவன்’ படப்பிடிப்பில் நான் இருந்தபோது அவரது அப்பா சந்திரசேகர் விஜய்யை என்னிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது அவருக்கு 13 அல்லது 14 வயது இருக்கும். மேலும் விஜய்க்கு நடிப்பில் ஆர்வம் இருப்பதாகவும் சொன்னார். அதன் பிறகு விஜய் நடிக்க வந்து படிப்படியாக தனது உழைப்பு மற்றும் திறமையால் இந்த மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளார். தற்போது அவர் சமூக சேவை செய்யப்போவதாகவும் கேள்விப்பட்டேன். இந்த நிலையில் எனக்கு விஜய் போட்டி என சொல்வது மனதுக்கு கஷ்டமாக உள்ளது.

விஜய் சொன்னது போலவே அவரது படத்திற்கு அவர்தான் போட்டி. விஜய் எனக்கு போட்டி என்று நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை, அதேபோல் விஜய் என்னை போட்டி என்று நினைத்தால் அது அவருக்கு மரியாதை இல்லை. இரண்டு பேரின் ரசிகர்களும் தயவு செய்து இந்த விவாதத்தை தவிர்த்து விடுங்கள், இது என்னுடைய அன்பான வேண்டுகோள் என்று கூறினார்.

ரஜினியின் இந்த பேச்சை எடுத்து விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் தங்களது மோதல் போக்கை கைவிடுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.