ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசியதன் முழு தொகுப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கும், எனது ரசிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது பணிவான வணக்கம். கடந்த வாரம் (மார்ச் -5) சென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களைச் சந்தித்து நான் நடத்திய ஆலோசனை தொடர்பாக, பத்திரிகைகளிலும் டெலிவிஷன் சேனல்களிலும் யூகத்தின் அடிப்படையில் பல செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அவற்றுள் பல விஷயங்கள் அடிப்படையற்றவை. இவற்றின் மீது டெலிவிஷன் சேனல்கள் விவாதங்களையும் நடத்தியுள்ளன. எனவே இந்த ஆலோசனைக் கூட்டம் எதற்காக நடத்தப்பட்டது? அரசியல் கட்சி துவங்கும் எனது நோக்கம் என்ன? இவை பற்றி எல்லாம் விளக்கமாக நானே தெளிவு படுத்திவிடுவது நல்லது என்று நினைக்கிறேன்.
2017 டிசம்பர் மாதம் 31-ம் தேதி நான் அரசியலுக்கு வருவேன் என்று முதன்முதலாகக் கூறியபோது "இங்கு சிஸ்டம் (அமைப்பு) சரியில்லை முதலில் அதைச் சரிசெய்ய வேண்டும் " என்று சொன்னேன். ஒரு நல்ல ஆட்சியைக் கொடுக்க வேண்டுமென்றால், வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் போதாது, இங்கு அரசியல் நடத்தப்படும் முறையிலும் மாற்றம் வர வேண்டும். அப்பொழுதுதான் ஒரு நேர்மையான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி, மதச் சார்பற்ற ஆட்சியைத் தர முடியும். அரசியல் மாற்றம் இல்லாத ஆட்சி மாற்றம் என்பது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் அதிலேயே சர்க்கரை பொங்கல் செய்வது போன்றது. ஆக இந்த அரசியல் மாற்றத்துக்காக நான் சில திட்டங்களை வைத்திருக்கின்றேன்.
அதுல் முக்கியமான மூன்று திட்டங்களில் ஒன்று, கட்சி பதவி தொடர்பானது. பெரிய அரசியல் கட்சிகளில் மாநில நிர்வாகிகளில் துவங்கி ஊராட்சிகள் வரை கிட்டத்தட்ட ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கட்சிப் பதவிகள் இருக்கின்றன. இந்த ஐம்பதாயிரம் பதவியிலிருப்போரின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் என்று ஒரு பதவிக்கு சராசரியாக ஐம்பது பேர் என்று எடுத்துக் கொண்டாலும் அவர்களின் எண்ணிக்கை இருபத்தைந்து லட்சமாக இருக்கும். இவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம் ஆளும் கட்சியினருக்கு ஏற்படுவதால், பெரியளவில் ஊழல் நடைபெற வாய்ப்புகள் உருவாகின்றன. கட்சிப் பொறுப்புகளில் இருப்பவர்கள் தேர்தல் நேரத்தில் வாக்குகளை பெற்று தர கட்சிக்குப் பெரிய அளவில் உதவுவார்களே! தவிர, தேர்தலுக்கு பிறகு இவர்களால் அரசுக்கும், மக்களுக்கும் தொந்தரவுதான் அதிகம்.ஆகவே தேர்தல் முடிந்தவுடன் கட்சிக்குத் தேவைப்படும் அத்தியாவசியமான 92 பதவிகளை மட்டும் வைத்துக் கொண்டு, தேவையற்ற மற்ற பதவிகளை நீக்க வேண்டும்.
இதுதான் என்னுடைய முதல் இட்டம்.
பொதுவாகவே இந்தியாவில் சட்ட மன்றங்களிலும் , பாராளுமன்றத்திலும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் பெரும்பாண்மை உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்த வயதுக்கு கீழே உள்ளவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒரு இளைஞன் அரசியலில் பிரகாசிக்க வேண்டுமென்றால், அவர் ஒரு எம்.பி. மகனாகவோ, எம்.எல்.ஏ மகனாகவோ , பணக்காரனாகவோ, செல்வாக்குள்ளவராகவோ இருக்க வேண்டும் என்ற நிலை மாற வேண்டும். நல்லவர்கள், படித்தவர்கள், இளைஞர்கள் அரசியல் ஒரு சாக்கடை என்று ஓதுங்க விடாமல். அரசியலில் ஈடுபட முன்வர வேண்டும். இளைஞர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்க பட வேண்டும். எனது கட்சியில் ஐம்பது வயதுக்கு கீழே உள்ளவர்கள், ஓரளவு படித்தவர்கள் , நேர்மையான தொழில் செய்யபவர்கள் அவர்கள் வாழும் பகுதியில் கண்ணியமானவர் எனப் பெயரெடுத்தவர்களைத் தேர்வு செய்து, 60 லிருந்து 65 சதவீதம் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து மீதியுள்ள 35 - 40 சதவீத்தில் வேறு கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காத நல்லவர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐ. ஏ.எஸ், ஐ.பி.எஸ் இவர்கள் விருப்பட்டு நமது இயக்கத்தில் சேர விரும்பினால் அவர்களுக்கு வாய்ப்பளித்து, இவர்கள் அனைவரையும் சட்ட மன்றத்திற்கு அனுப்பி அதிகார சூத்திரத்தை கையில் எடுத்து சேவை செய்ய வேண்டும். அதற்கு நான் பாலமாக இருக்க வேண்டும். இதை அடைவதற்கு கடந்த 45 வருடங்களாக நான் திரையுலகில் ஈட்டிய புகழ், மக்கள் என் மீது செலுத்திவரும் பேரன்பு, அவர்களுக்கு என் மேல் இருக்கும்அன்பு அனைத்தும் உதவுமென நம்புகிறேன் இது எனது இரண்டாவது திட்டம்.
தலைமையையும் ஆட்சியையும் தனித் தனியாக பிரிப்பது. அதாவது கட்சியை நடத்தும் தலைவர் வேறு, ஆட்சியை நடத்தும் தலைவர் வேறு. இந்த இரண்டையும் ஒன்றாகவே இணைத்துப் பார்த்து பழகிவிட்ட தமிழக அரசியலில் ஒரு மாற்று அரசியலை கொண்டுவர வேண்டியது அவசியம் என்று நான் கருதுகிறேன். கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒரே நபரின் தலைமை எனும் பட்சத்தில் , தேர்தலில் ஜெயித்து ஆட்சி அதிகாரத்திற்கு வருபவரின் ஐந்து வருட ஆட்சியில் என்ன தப்பு நடந்தாலும் , மக்களோ, கட்சி பிரமுகர்களோ ஆட்சியாளரைத் தட்டிக் கேட்க முடியாது. அவரை பதவியிலிருந்து கீழே இறக்கவும் முடியாது. இதையும் மீறி கட்சியில் இருப்பவர்கள் தட்டிக் கேட்டால் பதவியிலிருந்து இறக்கி விடுவார்கள் அல்லது தூரமாக தள்ளி வைத்துவிடுவார்கள். கட்சித் தலைமை மிகவும் வலிமையாக இருந்தால் தவறு செய்யும் போது தட்டிக் கேட்க முடியும். மேலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியையும் ஆட்சியாளர்கள் செய்யும் வகையில் பார்த்து கொள்ள முடியும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout