முன்னாள் முதலமைச்சரின் நூற்றாண்டு விழா.. ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என அறிவிப்பு..!
- IndiaGlitz, [Sunday,April 23 2023]
ஆந்திர மாநிலம் முன்னாள் முதலமைச்சர் என்டிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேசம், தெலுங்கானா என்று பிரிப்பதற்கு முன்னர் ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது அதன் முதலமைச்சராக இருந்தவர் என்டி ராமராவ். கடந்த 1923 ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி இவர் பிறந்த நிலையில் தற்போது அவரது நூற்றாண்டு விழா ஆந்திரா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் பிரபலமாக இருந்த நேரத்தில் தெலுங்கு சினிமாவில் முடிசூடா மன்னனாக இருந்தவர் என்டி ராமராவ் இருந்தார் என்பதும், தமிழிலும் அவர் ’கர்ணன்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கண்ணன், கிருஷ்ணன் வேடத்திற்கு என்டி ராமராவை விட்டால் பொருத்தமான நடிகர் வேறு யாரும் கிடையாது என்பது அப்போதைய ரசிகர்களின் கருத்தாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
1982 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் என்ற கட்சியை ஆரம்பித்த என்டி ராமராவ் 1983 ஆம் ஆண்டு ஆந்திர மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தில் 1984 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது எம்ஜிஆருக்கு ஆதரவாக என்டிஆர் தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்று குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 1996 ஆம் ஆண்டு மறைந்த என்டி ராமராவ் அவர்களின் நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மே 28ஆம் தேதி விஜயவாடாவில் என்டிஆர் நூற்றாண்டு விழா நடைபெற இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்றும் என்டிஆர் மகனும் நடிகருமான என்டிஆர் பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.