பெற்றோருக்கு ரஜினி வைத்த சிலையால் ஊர் மக்களின் பிரச்சனை தீர்ந்த ஆச்சரியம்: பொதுமக்கள் மகிழ்ச்சி..!

  • IndiaGlitz, [Saturday,April 15 2023]

ரஜினிகாந்த் தனது பூர்வீக ஊரில் தனது பெற்றோருக்கு சிலை வைத்ததை அடுத்து அந்த கிராமத்தில் உள்ள பொதுமக்களின் தண்ணீர் பிரச்சனை தீர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் சொந்த ஊர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் என்று கூறப்பட்டாலும் அவர் பூர்விகத்தினர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளி என்ற பகுதியில் தான் வசித்தனர். அவருடைய உறவினர்கள் இன்னும் அந்த கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் உறவினர்களின் சுக, துக்க நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்தின் அண்ணன் கலந்து கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினி தனது பெற்றோருக்கு தனது பூர்வீக ஊரில் சிலை வைக்க வேண்டும் என்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேப்பனப்பள்ளியில் 2.40 ஏக்கர் நிலத்தை வாங்கி வைத்திருந்தார். இந்த நிலத்தில் தற்போது தனது பெற்றோருக்கு சிலை வைத்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த சிலை உள்ள பகுதிக்கு அருகே ஒரு தண்ணீர் டேங்க் கட்டி அங்கிருந்து பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீண்ட காலமாக இந்த பகுதியில் இருந்த தண்ணீர் பிரச்சனை தற்போது தீர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறிய போது ’ரஜினிகாந்த் எங்கள் ஊர்க்காரர் என்று சொல்வதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம், இதுவரை அவர் ஒரு முறை கூட இந்த ஊருக்கு வரவில்லை என்ற ஒரு மனக்குறை தான் எங்களுக்கு உள்ளது. இருப்பினும் அவர் விரைவில் வருவார் என்று நாங்கள் நம்புகிறோம். ரஜினிகாந்த் தங்கள் பகுதிக்கு தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்ததற்கு நாங்கள் நன்றி கூறிக் கொள்கிறோம்’ என்றும் கூறியுள்ளனர்.