அரசியலா? திமுக எதிரணிக்கு ஆதரவா? குருமூர்த்தியுடன் ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை!

  • IndiaGlitz, [Monday,November 02 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது உடல்நிலையை கணக்கில் கொண்டு அரசியலுக்கு வரமாட்டார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தேர்தலுக்கு ஓரிரு மாதங்களுக்கு முன் திடீரென அவர் அரசியலில் குதிப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது. மொத்தத்தில் ரஜினி அரசியலுக்கு வருவது இன்னும் உறுதி செய்யப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரஜினியின் ரசிகர்கள் பலரும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டுமென்று போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திடீரென ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் துக்ளக் ஆசிரியரும், பாஜக பிரபலமுமான எஸ்.குருமூர்த்தி சந்தித்தார்.

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் யாரையும் சந்திக்காமல் இருந்த ரஜினிகாந்த் முதல் முதலாக தற்போது குருமூர்த்தியை சந்தித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின் போது கடந்த 1996ஆம் ஆண்டு அரசியலுக்கு ரஜினிகாந்த் வந்திருக்க வேண்டும் என்றும் அப்போது செய்த தவறை தற்போது மீண்டும் செய்ய வேண்டாம் என்றும் குருமூர்த்தி ஆலோசனை கூறியதாக தெரிகிறது

ஒருவேளை உடல்நிலையை கணக்கில் கொண்டு அரசியலுக்கு வர வேண்டாம் என்று முடிவு எடுத்தால் திமுகவுக்கு எதிரான அணிக்கு ஆதரவு அளிக்கும்படி ரஜினிகாந்திடம் எஸ் குருமூர்த்தி கேட்டுக்கொண்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த சந்திப்பு குறித்து ரஜினிகாந்த் அல்லது எஸ்.குருமூர்த்தி தரப்பில் இருந்து விளக்கம் அளிப்பார்களா? அரசியல் நிலைமை குறித்து ரஜினிகாந்த் என்ன முடிவு எடுப்பார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்