கட்டுப்பாட்டுடன் நடந்த ரசிகர்களின் ஆர்ப்பாட்டம்: ரஜினிகாந்த் பாராட்டு
- IndiaGlitz, [Monday,January 11 2021]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்றும், அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றும், உடல்நிலை காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் ரஜினியின் முடிவை ஏற்று கொள்ளாத அவரது ரசிகர்கள் சென்னையில் நேற்று பிரமாண்டமான ஆர்ப்பாட்டத்தை நடத்தி ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இந்த நிலையில் ரசிகர்களின் போராட்டத்தை அடுத்து தனது டுவிட்டரில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில அவர் ரசிகர்களுக்கு கூறியதாவது:
என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு...
நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பிலிருந்தும், மன்றத்துலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து, சென்னையில் ஓர் நிகழ்ச்சியை
நடத்துயிருக்கிறார்கள்.
கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது. தலைமையின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளாத மக்கள் மன்றத்தினர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வாழ்க தமிழ் மக்கள்! வளர்க தமிழ்நாடு!! ஜெய்ஹிந்த்!!!
இவ்வாறு ரஜினிகாந்த் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) January 11, 2021