ரஜினிகாந்த்-கமல்ஹாசன் அரசியல். ஒரு ஒப்பீடு
- IndiaGlitz, [Thursday,July 20 2017]
தென்னிந்திய திரையுலகின் இரண்டு முத்த நடிகர்கள், இருவருமே ஒருவருக்கொருவர் வெற்றிப்படங்களை கொடுப்பதில் சளைக்காதவர்கள். இருவருக்குமே உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் ஒன்று. இதெல்லாம் ஒற்றுமைகள். ரஜினிகாந்த் ஆன்மீகவாதி, கமல்ஹாசன் பகுத்தறிவாதி. ரஜினியின் பெரும்பாலான படங்கள் கமர்ஷியல், கமலின் ஒருசில படங்கள் புதுமையான, புரட்சிகரமான கருத்துக்களுடன் கூடியவை. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என பல துறைகளில் கமல்ஹாசனின் ஈடுபாடு இருக்கும். ரஜினிகாந்த் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவார். வேறு எதிலும் தலையிடுவதில்லை. இதெல்லாம் இவர்களின் வேற்றுமைகள்
இதெல்லாம் திரையுலகில் இருக்கும் இருவரது ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள். ஆனால் இருவரும் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும்?
1. ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என்று நீண்ட நெடுங்காலமாக யோசித்து வருகிறார். கிட்டத்தட்ட இருபது வருடங்கள். ஆனால் கமலின் அரசியல் முடிவு கிட்டத்தட்ட இருபதே நாட்கள் தான். கடந்த சில நாட்களாகவே மட்டுமே அரசியல் சொற்போர் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் அரசியலில் குதிப்பது குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக கமல் அறிவிக்கவில்லையே தவிர அந்த நாள் வெகு அருகில் இருக்கின்றது என்பது மட்டும் நிச்சயம்
2. ரஜினி அரசியல் பற்றி பேசினால் அவரது படத்திற்கு கூடுதல் விளம்பரம் என்று கூறுவதுண்டு. தற்போதைய அரசியல் கூட 'காலா' படத்தின் விளம்பரத்திற்காக என்று ஒரு கூட்டம் கூறி வருகிறது. எனவே ரஜினி அரசியல் பேசினால் அது அவர் படத்திற்கு கிடைக்கும் விளம்பரம் என்று கூறப்படும் நிலையில், கமல் அரசியல் பேசினால் அது அவர் படத்திற்கு கிடைக்கும் தடையாக இருக்கும். கடந்த கால வரலாற்றை புரட்டி பார்த்தால் இந்த உண்மை புரியவரலாம்
3. ரஜினியின் குற்றச்சாட்டுக்கள் மேலோட்டமாக யாரையும் குறிப்பிடாத வகையில் இருக்கும். குறிப்பாக சிஸ்டம் சரியில்லை என்று பொதுவாக கூறுவது. கமலின் குற்றச்சாட்டு நேருக்கு நேர் தான். ஒளிவு மறைவு இல்லை.
4. தன்னை விமர்சிப்பவர்களை கூட புகழ்ந்து பேசும் பெருந்தன்மை கொண்டவர் ரஜினி. குறிப்பாக சீமான், அன்புமணி, குறித்து ரஜினி புகழ்ந்து பேசினார். அவர்கள் இன்றுவரை ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்தே வருகின்றனர். விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுப்பவர் கமல், முதுகெலும்பில்லாதவர் என்று கமலை கூறிய அரசியல்வாதி ஒருவருக்கு எலும்பு வல்லுனர் என்ற பட்டம் கொடுத்தது ஒரு உதாரணம்
5. இரும்புப்பெண்மணி என்று கூறப்படும் ஜெயலலிதாவை எதிர்த்த அனுபவம் இருவருக்குமே உண்டு. 1996ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று ரஜினி கூறிய ஒரே ஒரு பேட்டி ஒரு ஆட்சியையே மாற்றியது. விஸ்வரூபம் படத்தின் பிரச்சனையின்போது ஜெயலலிதா அரசை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்ற கமலின் தைரியம். எந்த பிரச்சனைக்கும் பேட்டி கொடுக்காத ஜெயலலிதா, விஸ்வரூபம் பிரச்சனையில் என்ன நடந்தது என்பதை சுமார் ஒரு மணி நேரம் பேட்டி கொடுத்து விளக்கம் கொடுக்க வைத்தவர் கமல்
6. இருவருமே திமுக தலைவர் கருணாநிதியிடம் நெருக்கமாக இருந்தவர்கள், இருப்பவர்கள். கருணாநிதியை ரஜினி தனது நண்பர் என்று கூறுவார் என்றால், கமல் தனக்கு தமிழ் கற்று கொடுத்ததே கருணாநிதி என்று கூறியவர்.
இவ்வாறு அரசியல் பாதையில் இருவருக்கும் சில ஒற்றுமைகள், சில வேற்றுமைகள் இருந்தாலும், தேர்தல் அரசியல் என்று வரும்போது மக்களின் செல்வாக்கை எவ்வாறு பெறுவது என்பதில் இருவருக்குமே அனுபவம் கிடையாது. ஆன்லைனில் ஆதரவு கொடுப்பவர்கள் பெரும்பாலும் ஓட்டு போட போகாதவர்கள். இவர்களை நம்பி களமிறங்குவது ஓட்டை படகில் பயணம் செய்வது போல. மக்களின் நம்பிக்கையை பெற, அந்த நம்பிக்கையை ஓட்டாக மாற்ற எதிர்கால வளர்ச்சி குறித்த தெளிவான திட்டங்கள் தேவை, அதைவிட அந்த திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் திறமை தேவை. காசுக்கு ஓட்டு போட்டு பழகிய பொதுமக்களை கொள்கைக்காக ஓட்டு போட வைக்கும் பேச்சுத்திறமை தேவை. குறிப்பாக அனைவருக்கும் புரியும்படி பேச வேண்டும் என்பது முக்கியம். இவை அனைத்தையும் விட ஒருவேளை ஆட்சியை பிடித்து முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்துவிட்டால் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் சுயநலமில்லாத மனது தேவை. இவை அனைத்தும் இருந்தால் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் தனித்தனியாகவோ, இணைந்தோ செயல்பட்டு அரசியலிலும் சூப்பர் ஸ்டாராகவும், உலக நாயகனாகவும் மாறலாம்