'கபாலி' கவுண்ட் டவுன் ஆரம்பம். இன்னும் 8 நாட்களில் 'நெருப்புடா!!!
Wednesday, July 13, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் ரிலீசுக்கு முன்னர் ஒரு திரைப்படத்திற்கு இவ்வளவு பிரமாண்டம் இருந்ததில்லை, இனிமேலும் இருக்க வாய்ப்பில்லை என்கிற அளவில் வானம் முதல் பூமி முதல் 'கபாலி' படத்திற்கு புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது.
இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சாதாரண படங்களை தயாரித்தாலே பிரமாண்டமாக புரமோஷன் செய்வார். ரஜினி படம் என்றால் சும்மா இருப்பாரா? இதுவரை உலக சினிமா பார்த்திராத பலவித புரமோஷன்களை யோசித்து, இதற்காகவே கோடிக்கணக்கில் பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் பல முன்னணி நிறுவனங்கள் 'கபாலி'யுடன் டைஅப் செய்து கொண்டன. ஏர் ஆசியா நிறுவனம் இந்த படத்தின் ஏர்லைன் பார்ட்னராக ஒப்பந்தம் செய்து பல விமானங்களில் 'கபாலி' படத்தின் போஸ்டரை பதிவு செய்து இந்த படத்தை மண்ணுக்கு மட்டுமின்றி விண்ணிற்கும் புரமோஷன் செய்தது. ஹாலிவுட், பாலிவுட் படவுலகமே இந்த வித்தியாசமான புரமோஷனை பார்த்து ஆச்சரியம் அடைந்தது. அதுமட்டுமின்றி 'கபாலி' ரிலீஸ் தினத்தில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானமும் ஏற்பாடு செய்துள்ளது.
அதேபோல் ஃபைவ் ஸ்டார் சாக்லேட் நிறுவனம் இந்த படத்தின் பார்ட்னராக இணைந்து கபாலி' படத்தின் காட்சிகளை தனது விளம்பரத்தின் காட்சிகளுடன் இணைத்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வருகிறது.
'கபாலி' படத்தின் தொலைத்தொடர்பு பார்ட்னராக இணைந்துள்ள ஏர்டெல் நிறுவனம் இந்த படத்தின் பெயரில் சிம்கார்டு, ரீசார்ஜ் சலுகை மற்றும் ரிங்க்டோன், வால்பேப்பர் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறது. ஒரு திரைப்படத்துடன் ஏர்டெல் நிறுவனம் டை அப் செய்து கொள்வது ஆசியாவில் இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் பிவிஆர் நிறுவனம் இந்த படத்தின் மல்டிபிளக்ஸ் பார்ட்னராக இணைந்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து பிவிஆர் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளிலும் இந்த படம் புரமோஷன் செய்யப்படுகிறது.
மேலும் முத்தூட் நிறுவனம் 'கபாலி' பட ஸ்டில் உடன் கூடிய தங்கம், வெள்ளி நாணயங்களை வெளியிடுகிறது. ஒரு திரைப்படத்தின் பெயரில் தங்க நாணயங்கள் வெளியிடுவது உலகிலேயே இதுதான் முதல்முறை. சுமார் ரூ.40 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை இந்நிறுவனம் வெளியிடுவதாக கூறப்படுகிறது.
மேலும் வி.எஸ்.மருத்துவமனை, மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்களும் 'கபாலி'யுடன் வர்த்தக உடன்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 'கபாலி' திரைப்படம் ரூ.80முதல் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியின் மிகப்பெரிய பட்ஜெட் படமான 'எந்திரன்' படத்தை விட கிட்டத்தட்ட பாதி பட்ஜெட்டே இந்த படத்திற்கு ஆகியுள்ளது என்றாலும் இந்த படத்தின் ஆரம்பகட்ட வசூலே ரூ.200 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் 'ரெக்ஸ் சினிமா' திரையரங்கில் திரையிடப்படும் முதல் இந்திய சினிமா 'கபாலி'தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2800 இருக்கைகள் கொண்ட இந்த திரையரங்கில் முதல் காட்சிக்குரிய அனைத்து டிக்கெட்டுக்களும் விற்பனையாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெறுவதிலும் மிகப்பெரிய போட்டி ஏற்பட்டது. கலைப்புலி எஸ்.தாணுவின் அலுவலகம் கடந்த சில நாட்களாக இரவும் பகலும் இயங்கியது. இந்த படத்தின் அரபுநாடுகளின் ரிலீஸ் உரிமையை ஏபி இண்டர்நேஷனல் என்ற நிறுவனமும், பிரிட்டன், ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் ரிலீஸ் உரிமையை ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனமும், வட அமெரிக்கா ரிலீஸ் உரிமையை சினி கேலக்ஸி நிறுவனமும், மலேசிய ரிலீஸ் உரிமையை மாலீக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனமும் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் சிங்கப்பூர் ரிலீஸ் உரிமையை பிரபல நடிகர் அருண்பாண்டியன் பெற்றுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்,
அதேபோல் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ஜாஸ் சினிமாஸ் நிறுவனமும், கேரள ரிலீஸ் உரிமையை பிரபல நடிகர் மோகன்லாலும், தெலுங்கு மாநில ரிலீஸ் உரிமையை சண்முகா பிலிம்ஸ் நிறுவனமும், கர்நாடக ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் நிறுவனமும், வட இந்திய ரிலீஸ் உரிமையை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் மிகப்பெரிய தொகைகளை கொடுத்தும் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் தமிழ் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஜூலை 22ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இந்த படம் வெள்ளி,சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில் இதுவரை எந்த இந்திய படமும் செய்திராத வசூலை குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அனுபவம் வாய்ந்த தலைவரின் நடிப்பும், இளைஞர் பா.ரஞ்சித்தின் இயக்கமும் இணைந்துள்ளதால் இந்த படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை வெளிநாடுகளில் இந்திய படம் என்றால் இந்தி படம் என்று மட்டுமே நினைத்து கொண்டிருந்த காலத்தை எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' மாற்றி காட்டி தென்னிந்திய மொழி படங்களும் இந்திய படங்கள்தான் என்பதை உலக அளவில் அடையாளம் காணவைத்தது. ஆனால் இந்திய படங்கள் என்றால் தமிழ்ப்படங்கள் தான் என்று வெளிநாட்டினர் நினைக்கும் காலம் வெகுதூரம் இல்லை என்பதை 'கபாலி'யின் வசூல் நிரூபிக்கும்.
'கபாலி' படத்தின் வசூல் பல சாதனைகள் நிகழ்த்தவும், உலக அளவில் மாபெரும் வெற்றி பெறவும் படக்குழுவினர்களுக்கு நமது அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments