ரூ.600 கோடி இலக்கை தொட்ட 'கபாலி. ஒருசில ஆச்சரிய தகவல்

  • IndiaGlitz, [Friday,August 05 2016]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த மாதம் 22ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி, முதல் தினத்தில் இருந்தே பல சாதனைகளை உடைத்து வருகிறது. இந்நிலையில் இந்த படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
வெளியான முதல் நாளே ரூ.48 கோடி வசூல் செய்து அனைவரையும் ஆச்சரிப்படுத்திய 'கபாலி' இதுவரை இந்தியாவில் மட்டும் ரூ.211 கோடி வசூல் செய்துள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் இந்த படம் வசூல் செய்த தொகை ரூ.40 கோடி.
வெளிநாட்டை பொறுத்தவரையில் அமெரிக்கா, கனடா மட்டுமின்றி மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் மிகப்பெரிய வசூலை தந்த 'கபாலி' வெளிநாடுகளில் மட்டும் ரூ.259 கோடி வசூல் செய்துள்ளது.

ரிலீசுக்கு முன்பே பல முன்னணி நிறுவனங்களுடன் டை-அப் செய்து கொண்டது, இசை வெளியீட்டு உரிமை, சாட்டிலைட் உரிமை என ரூ.200 கோடியை இந்த படம் வசூல் செய்திருப்பதால் இந்த படம் மொத்தத்தில் ரூ.650 கோடி வசூல் செய்திருப்பதாகவும் இன்னும் ஒருசில நாட்களில் ரூ.700 கோடியை தொட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி விரைவில் இந்த படம் சீன, ஜப்பானிய, தாய்லாந்து மொழிகளிலும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' திரைப்படமும் உலகம் முழுவதும் ரூ.600 கோடி வசூல் செய்திருந்தாலும் அந்த படத்தின் பட்ஜெட்டை விட பாதி அளவே 'கபாலி'க்கு செலவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் உள்பட இந்த படத்தின் நடித்த நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்களின் சம்பளம் சுமார் ரூ.50-60 கோடி ஆகியுள்ளதாகவும், புரமோஷன் செலவுகளை சேர்த்தால் இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ.75 கோடி என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு சென்னையில் செட் போட்டு படமாக்கப்பட்டுள்ளது. மலேசிய படப்பிடிப்பு மட்டுமே குறிப்பிடத்தக்க வகையில் செய்த செலவு ஆகும். மேலும் இந்த படத்திற்கு தேவைப்பட்ட விலையுயர்ந்த கார்களை மலேசியாவில் உள்ள தமிழர்கள் இலவசமாகவே கொடுத்து உதவி செய்தனர் என்பதால் இந்த படத்தின் பட்ஜெட் கணிசமாக குறைந்தது.
இந்த படத்தின் வசூல் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூறியபோது, "என்னுடைய வாழ்நாளில் 'கபாலி' படத்தை தயாரித்ததை என்னால் மறக்கவே முடியாது. 100 வருட இந்திய திரையுலக வரலாற்றில் 'கபாலி' படம் அனைத்து சாதனைகளையும் தகர்த்துவிட்டது. இந்த படத்தால் எனக்கு கிடைத்த 'மகிழ்ச்சி'க்கு அளவே இல்லை' என்று கூறியுள்ளார். இவர் தயாரித்த 'தெறி' படமும் கடந்த ஏப்ரல் மாதம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

'கோச்சைடையான்', லிங்கா என இரண்டு சுமாரான ஹிட் படங்களை கொடுத்த ரஜினிக்கு 'பாட்ஷா'வுக்கு பின்னர் கிடைத்த மிகப்பெரிய வெற்றி படமாக 'கபாலி' அமைந்துள்ளது. முதல் நாளில் ஒருசிலர் இந்த படத்திற்கு எதிர்மறை கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர். ஸ்லோவான திரைக்கதை, வன்முறைக்காட்சிகள் அதிகம், ஜாதியப்பார்வை ஆகிய எதிர்மறை கருத்துக்களை தெரிவித்தவர்கள் கூட இந்த படத்தின் வசூலை பார்த்து ஆச்சரியமடைந்து தற்போது அவர்களே பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் முதல்முறையாக பெண்கள் கூட்டத்தை திரையரங்கை நோக்கி வரவழைத்த படம் 'கபாலி' என்று அடித்து கூறலாம். ரசிகர்கள் மற்றும் இளைஞர்களின் வசூல் முதல் மூன்று நாட்களில் முடிந்துவிடும். ஒரு படம் தொடர்ச்சியாக திரையரங்கில் ஓட வேண்டும் என்றால் குடும்ப ஆடியன்ஸ் சப்போர்ட் தேவை. அது இந்த படத்திற்கு கிடைத்ததுதான் பெரிய பலம்.
ஒரு படத்தின் வெற்றி என்பது அந்த படத்தில் நடித்த ஹீரோவுக்கு மட்டுமின்றி கடைநிலை ஊழியர் வரை சந்தோஷப்படுத்தும் விஷயம். இந்த படத்தினால் இந்த படத்தில் பணிபுரிந்த அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கியிருப்பது மட்டுமின்றி அவர்களுக்கு அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகளும் காத்திருக்கின்றது. என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய படங்கள் என்றாலே இந்தி படங்கள் மட்டும்தான் என நினைத்து கொண்டிருந்த வெளிநாட்டு பாக்ஸ் ஆபீஸ், தென்னிந்தியாவைவும் திரும்பி பார்க்கும் வகையில் உருவாக்கிய 'கபாலி' படக்குழுவினர்களுக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.