'நீங்க தான் ரியல் சூப்பர் ஸ்டார்': காவல்துறை அதிகாரியை பாராட்டிய ரஜினிகாந்த்!

  • IndiaGlitz, [Friday,July 29 2022]

காவல்துறை அதிகாரிகளை வீட்டிற்கு வரவழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ’நீங்கள் தான் ரியல் சூப்பர் ஸ்டார்’ என பாராட்டு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

நேற்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார் என்பதும் அவருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர், முதல்வர் பங்கு கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்த நிலையில் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் போது அவருக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து நுங்கம்பாக்கம் ஏசி தலைமையில் காவலர் குழு ரஜினியை அவரது வீட்டிலிருந்து நேரு ஸ்டேடியம் வரை ட்ராபிக் இன்றி அழைத்து வந்ததோடு நேரு ஸ்டேடியத்தில் அவரது இருக்கையில் அமர வைக்கும் வரை பாதுகாப்பு ஏற்பாடுகளை கனகச்சிதமாக செய்திருந்தது.

இதனை அடுத்து தனக்கு சரியான வகையில் பாதுகாப்பு அளித்த காவல்துறையினரை இன்று வீட்டிற்கு வரவழைத்து ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரையும் ’நீங்கள் தான் ரியல் சூப்பர் ஸ்டார்’ என்று அவர் பாராட்டினார். பின்னர் ஒவ்வொரு காவல் துறை அதிகாரியுடனும் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதுகுறித்து காவல்துறையினர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’நாங்கள் எங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை தான் செய்தோம், ஆனால் அதை ரஜினிகாந்த் அவர்கள் மதித்து வீட்டுக்கே வரவழைத்து பாராட்டியது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. இந்தியாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினிகாந்த் சாதாரண காவலர்களின் பணிச்சுமையை மனதில் வைத்து எங்களை பாராட்டியதை பார்க்கும் போது உண்மையிலே அவர் தான் ரியல் சூப்பர் ஸ்டார்’ என்று கூறினார்கள். ரஜினிகாந்தின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.